(Thoo) ஆப்கானிஸ்தானில் போராளிகளின் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்காவாக இருக்கலாம் என்று ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் சந்தேகத்திற்குரியவர்களின் பட்டியலை அவர் தயாரித்துள்ளதாக அதிபரின் ஆலோசனைக் குழுவின் முக்கிய அதிகாரியை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகரில் அமைந்துள்ள லெபனான் ரெஸ்ட்ராண்டில் 13 வெளிநாட்டினர் உள்பட 20 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பும் இதில் உள்படும். ஆப்கான் அரசை கவிழ்க்க அமெரிக்கா சதித் திட்டம் தீட்டிய தாக்குதலே லெபனான் ரெஸ்ட்ராண்ட் குண்டுவெடிப்பு என்று கர்ஸாய் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.
ஆப்கான் பாதுகாப்பானதாக இல்லை என்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் நோக்கம். இவ்வாண்டு இறுதியில் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தை ஆப்கானில் நிறுத்துவதற்கே இத்தகைய குண்டுவெடிப்பு நாடகங்கள் நடப்பதாக கர்ஸாய் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.
அமெரிக்க ராணுவத்தினரை மேலும் 10 ஆண்டுகளுக்கு ஆப்கானில் நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட கர்ஸாய் மறுத்து வருகிறார். ஆப்கானின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்தால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என்பது கர்ஸாயியின் நிலைப்பாடு.
தாக்குதல் நடத்தப்பட்ட பாணியைப் பரிசோதித்தும், விரிவான விசாரணைக்கும் பிறகே இம்முடிவுக்கு வந்ததாக அந்த அதிகாரி கூறுகிறார். சில பகுதிகளில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்கிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய மையங்கள் மீது பதிலடி தாக்குதலாக குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன.
இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியிலும் ஒரே சக்தியே உள்ளதாக புலனாய்வில் நிரூபணமாகியுள்ளது. சாதாரண மக்கள் கொல்லப்படுவதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதே குண்டுவெடிப்புகளின் லட்சியம் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால், இதனையெல்லாம் அமெரிக்க ராணுவம் நிராகரித்துள்ளது. ஆப்கானில் 12 ஆண்டுகளாக அமைதியை நிலைநாட்ட அவர்கள் போராடுகின்றார்களாம். ஆப்கானின் அமெரிக்க கமாண்டர் ஜெனரல் ஜோசஃப் டன்ஃபோட் ஜூனியர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment