வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடமும் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கூறகின்றது.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு குறித்த பிரேரணையொன்றை காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களான எம். எச். ஏ . நசீர் மற்றும் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி ஆகியோர் முன்வைத்தனர்.
காத்தான்குடி பிரதேசத்திலிருந்து காணாமல் போன முஸ்லிம்களை மையப்படுத்தி, அவரால் முன் வைக்கப்பட்ட அந்த பிரேரணையில், கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு, புதை குழிகளை தோண்டுதல், மனித எச்சங்கள் அங்கு காணப்பட்டால் அவற்றை அடையாளம் கண்டு, சமய ஆசாரங்களின் அடிப்படையில் மரண சடங்குகளை மேற்கொள்ளல், கடத்தப்பட்டு கொல்லப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்குதல் மற்றும் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரை அடையாளங்கண்டு, விசாரணைக்கு உட்படுத்தவும், உரிய தண்டனைகளை வழங்கவும் கோருதல் போன்ற விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
தங்களால் நகர சபையில் முன் வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக ஏ. எல். எம் . சபில் நழீமி குறிப்பிடுகையில், ''முஸ்லிம்கள் காணாமல் போன சம்பவங்களுடன் விடுதலைப்புலிகளே தொடர்புபட்டிருந்தார்கள். அவ்வேளை இவர்கள் இருவரும் அந்த அமைப்பில் இருந்துள்ளார்கள். இந்நிலையில் அது பற்றிய தகவல்களை ஆணைக்குழுவினால் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடியும் என முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்'' எனக் கூறினார்.
தங்களால் முன் வைக்கப்பட்ட இந்த பிரேரணை சபையில் நிராகரிக்கப்பட்டாலும் ஆணைக்குழுவிடம் தங்களின் யோசனைகளும் கருத்துக்களும் நேரடியாக முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ். எச். அஸ்பர், பிபிசி தமிழோசையுடன் பேசுகையில், குறித்த அரசியல்வாதிகளின் பெயரை, சக உறுப்பினர் தனது பிரேரணையில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும் உரையாற்றும் போது மாத்திரந்தான் குறிப்பிட்டுப் பேசினார் என்றும் கூறுகின்றார்.
தமது பிரதேசத்திலிருந்து காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் இவர்களால் முன் வைக்கப்பட்ட பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டது எனக் கருதி சபையால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இவை குறித்து துணை அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் கருத்தை எம்மால் உடனடியாகப் பெறமுடியவில்லை. bbc
No comments:
Post a Comment