Wednesday, January 29, 2014

''நான்தான் எகிப்தின் ஜனாதிபதி - நீதிமன்றத்தில் முழங்கிய முஹம்மது முர்ஸி





(Thoo) “எகிப்தின் அதிபர் நான். என்னை எவ்வாறு சிறையில் அடைக்க முடியும்?” என்று ராணுவ சதிப் புரட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.



2011-ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான எழுச்சிப் போராட்டத்தின் போது சிறையில் இருந்து தப்பினார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இக்கேள்வியை முர்ஸி எழுப்பினார். நீதிமன்றத்தில் இருந்து சத்தம் வெளியே கேட்காத அளவுக்கு கண்ணாடியால் மூடப்பட்ட அறையில் முர்ஸி மற்றும் இதர இஸ்லாமிய தலைவர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.



கையை உயர்த்தி சைகை காட்டியபோது, நீதிபதி முர்ஸிக்கு பேச அனுமதி அளித்தார். ஊடகவியலாளர்களுக்கும் அவரது பேச்சைக் கேட்க அனுமதி வழங்கப்பட்டது. அப்பொழுது முர்ஸியும், அவரோடு இருந்தவர்களும் ‘‘ராணுவ ஆட்சி ஒழியட்டும்’’ என்று முழக்கமிட்டனர்.



பின்னர் “நான் சட்டரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்” என்று முர்ஸி கூறினார். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து விமானம் மூலம் முர்ஸி கெய்ரோவில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.



நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கத்திற்கு மாறாக ராணுவ தலைமை தளபதி அல் ஸீஸியின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். கடந்த ஜூலை 3-ஆம் தேதி ராணுவ சதிப் புரட்சியின் விளைவாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முர்ஸி மீது நான்கு வழக்குகள் சுமத்தப்பட்டன.



உள்ளூர் மக்கள் தாம் 2011-ஆம் ஆண்டு சிறைக்கைதிகளை விடுவித்தனர் என்று முர்ஸி முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரியான ஜெனரல் முஹம்மது ஸஈத் சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதலின் பின்னணியில் யார் என்பது தெளிவில்லை. விசாரணை துவங்கியதாக போலீஸ் அறிவித்துள்ளது.




No comments:

Post a Comment