Sunday, January 26, 2014

அறுவை சிகிச்சைக்குப்பின் ஐக்கிய அரபுக் குடியரசின் அதிபர் நலமுடன் இருப்பதாகத் தகவல்



ஐக்கிய அரபுக் குடியரசின் அதிபராக இருப்பவர் ஷேக் கலிபா பின் சையத் அல்-நஹயான் ஆவார். 66 வயதாகும் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப்பிறகு அவர் நலமுடன் இருப்பதாக அரசுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.



கடந்த 1971 ஆம் ஆண்டு அதிபர் நஹயானின் தந்தை ஷேக் சையது பின் சுல்தானால் அரபுக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா, உம் அல் குவைவான் ஆகிய ஏழு அரபு நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இவற்றுள் தனது எண்ணெய்வளத்தினால் உலகளவில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ள அபுதாபியே செல்வச்செழிப்பில் முன்னணியில் உள்ளது. கடந்த 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி அபுதாபியின் இளவரசராக அறிவிக்கப்பட்ட நஹயான் தனது தந்தையின் மறைவுக்குப்பின் கடந்த 2004 ஆம் ஆண்டில் அபுதாபியின் தலைவராகவும், ஐக்கிய அரபுக் குடியரசின் அதிபராகவும் பதவி ஏற்றார். மீண்டும் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தக் கூட்டமைப்பின் அதிபர் மற்றும் துணை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட உச்ச மத்திய கவுன்சில் நஹயானையே அடுத்த ஐந்தாண்டிற்கும் அதிபராக நியமித்துள்ளது.



நஹயானின் சகோதரர் ஷேக் முகமது பின் சையது தற்போது அபுதாபியின் இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரே அபுதாபியின் நிர்வாகக் கவுன்சிலின் தலைவராகவும், ஐக்கிய அரபுக் குடியரசின் ஆயுத படைகளுக்கான இணை உயர்மட்ட கமாண்டராகவும் செயல்பட்டு வருகின்றார்.


No comments:

Post a Comment