Friday, January 24, 2014

ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலை - விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்து



ரோஹிங்கியா முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்த சம்பவம் குறித்து மியான்மர் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.



பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று அவர் தெரிவித்தார். ஜனநாயகத்திற்கு நெருக்கமாகி வரும் மியான்மரின் இமேஜை முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் சீர்குலைக்கும் என்று நவி பிள்ளை கூறினார்.



ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்த சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்திருந்தது. மேற்கு மியான்மரின் ராக்கேனில் 90 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். புத்த மதத் தீவிரவாதிகளும், போலீசும் இணைந்து அங்குள்ள ஒரு கிராமத்தில் 48 முஸ்லிம்களை கொலை செய்ததாக நேற்று முன்தினம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.



கிராமத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுமாறு வெறி பிடித்த புத்த மதச் சாமியார்கள் அங்குள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே வேளையில், அப்பகுதிக்கு பார்வையிட செல்வதற்கு சர்வதேச குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும் என்று மியான்மர் அரசு அறிவித்துள்ளது.



கூட்டுப் படுகொலை நிகழ்ந்த பகுதிகளை பரிசோதிக்கவும், மக்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறவும் வெளிநாட்டு குழுவினருக்கு அனுமதி அளிக்க தீர்மானித்துள்ளதாக அதிபரின் செய்தி தொடர்பாளர் இ டுட் தெரிவித்தார்.

சம்பவத்தைக் குறித்து விவரிக்காத டுட், கூட்டுப் படுகொலை நடக்கவில்லை என்று மீண்டும் கூறினார்.




No comments:

Post a Comment