Tuesday, February 25, 2014

படையினருக்கு எதிரான போர்க்குற்றங்களை நிராகரித்து குருதியில் கையெழுத்திட தயார் - சஜித் பிரேமதாச சூளுரை



முப்பது வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டுக்கு சமாதானத்தை பெற்றுக்கொடுத்த பாதுகாப்பு படையினருக்கு எதிரான போர்க்குற்றங்களை நிராகரித்து குருதியில் கையெழுத்திட தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,



சிறப்புரிமைகள், சலுகைளுக்காக மனச்சாட்சியை காட்டிக்கொடுத்து மோசடியான வங்குரோத்து நிலையில் இருக்கும் அரசாங்கத்தை காப்பதற்காக நான் இந்த உறுதிமொழியை வழங்கவில்லை. நாட்டை காப்பற்றிய இராணுவத்தினருக்காகவே இந்த உறுதிமொழியை வழங்குகிறேன்.



இராணுவத்தினரை காப்பாற்றுவதும் மோசடிமிக்க இந்த அரசாங்கத்திற்கு உயிர் வாயுவை கொடுப்பது ஆகிய இருவேறு விடயங்கள் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.



இராணுவத்தினர் தொடர்பான மக்களின் அனுதாபத்தையும் அவர்களுக்கு எதிரான சர்வதேச சக்திகள் பற்றி மக்களின் கோபத்தையும் அரசாங்கம் தந்திரமான முறையில் தமக்கு சாதமாக பயன்படுத்த முயற்சித்து வருகிறது. இதன் மூலம் தமது இருப்பை தற்காத்து கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகிறது.



மக்களை தவறாக வழி நடத்தி நாட்டை அடகு வைத்து அழிவை ஏற்படுத்தும் நபர்களையே மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல வேண்டுமே அன்றி வேறு எவரையும் அல்ல என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment