மூளைச்சாவு ஏற்பட்டு கோமா நிலையில் இருந்த கர்ப்பிணிப் பெண் அழகான ஆண் குழந்தையை பிரசவித்துவிட்டு உயிரிழந்த சம்பவம் கனடாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவை சேர்ந்த டைலன் பென்சனின் மனைவியான ராபின் பென்சனுக்கு கடந்த மாதம் திடீரென்று மூளைச்சாவு ஏற்பட்டு, உடல் உறுப்புகளின் இயக்கம் நின்றுபோனதால் அசைவற்ற கோமா நிலைக்கு சென்றார். அவரது வயிற்றில் இருந்த 8 மாத கருவை காப்பாற்ற முயன்ற டாக்டர்கள் உயிர் காக்கும் உபகரணங்களின் துணையுடன் அவரது மரணத்தை தள்ளி வைத்தனர்.
கடந்த சனிக்கிழமை சிசேரியன் ஆபரேஷன் மூலம் அவரது வயிற்றில் வளர்ந்து வந்த ஆண் குழந்தை அகற்றப்பட்டது. அதே சமயம் அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை ராபினின் உயிரை ஊசலாட வைத்துக் கொண்டிருந்த உபகரணங்களும் அகற்றப்பட்டன.
இதனையடுத்து 5 வாரங்களாக ஒரு புதிய உயிரை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்த தனது உயிரை கையில் பிடித்து வைத்திருந்த ராபின் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.
ஒரு மலர் உதித்தது; ஒரு மலர் உதிர்ந்தது என்பது போல் மகன் பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதா? மனைவியை பிரிந்த சோகத்தை எண்ணி அழுவதா? என்ற இனம் புரியாத மனநிலையில் டைலன் பென்சன் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரை செய்து வரும் வேலையில் இருந்து நின்று விட்டு புதிய வரவான மகனுக்காகவே 24 மணி நேரத்தையும் செலவிட முடிவு செய்துள்ள டைலன், இதன் மூலம் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்வதற்காக இணையதளத்தின் மூலம் நிதி சேகரித்து வருகிறார்.
இந்த முயற்சிக்கு பெருத்த ஆதரவும், வரவேற்பும் குவிந்து வருவதாகவும், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நானும் என் மகனும் நன்றி கடன் பட்டுள்ளோம் எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
No comments:
Post a Comment