Wednesday, February 26, 2014

அத்துரலியே ரத்ன தேரர் என்ன செய்ய போகிறார்..??



இலங்கையின் முக்கிய பௌத்த பீட பிரிவான அமரபுர சிறி சத்தம்ம வங்ஷிக பௌத்த பீடத்திற்குரிய பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதற்கு தடைவிதித்து அண்மையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்ததது.



பௌத்த பீடத்தின் இந்த தீர்மானம் காரணமாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்பந்தப்பட்ட பௌத்த பீடத்தின் பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரருக்கு துறவறமா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியா என்ற இரண்டில் ஒன்றை தெரிவு செய்யும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.



பலப்பிட்டி - வெலிதரயில் நேற்று முன்தினம் கூடிய அமரபுர சிறி சத்தம்மவங்ஷிக பீடத்தின் மாநாயக்கர் அஹூங்கல்ல சிறி சீல விசுத்தி தேரர் தலைமையிலான பீடத்தின் சங்க சபையினர் தமது பீடத்தின் பிக்குகள் நேரடியான அரசியல் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட செயற்பாடுளில் ஈடுபட இடமளிப்பதில்லை என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை எடுத்தது.



இந்த நிலையில், தீர்மானத்தை அடுத்து அமரபுர பீடத்தின் பிக்குவான அத்துரலியே ரத்ன தேரரின் தொடர்பில் எடுக்க போகும் நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட அந்த பீடத்தின் மாநாயக்கர் சீல விசுத்தி தேரர்,



அத்துரலியே ரத்ன தேரர் எமது பீடத்தில் இருந்து விலகி வேறு சிலரை இணைத்து கொண்டு தனியான பௌத்த பீடமாக செயற்பட புத்தசாசன அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.



எனினும் புத்தசாசன அமைச்சு அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் அத்துரலியே ரத்ன தேரர் எமது பௌத்த பீடத்தின் பிக்கு அல்ல என்றே என்னால் கூற முடியும். அவர் எம்முடன் மீண்டும் இணைய வேண்டுமானால் அவர் அரசியல் நடவடிக்கைகளை கைவிட வேண்டிய நிலைமை ஏற்படும்.



பிக்குமார் எவராவது அரசியலில் ஈடுபடும் தேவை இருந்தால், அவர்கள் காவி கழற்றி வைத்து தமது வீடுகளுக்கு சென்று அரசியலில் ஈடுபடலாம் என குறிப்பிட்டுள்ளார்.



இலங்கையின் பௌத்த பீடங்களின் சட்டத்திற்கு அமைய பிக்கு ஒருவர் பீடங்களை விட்டு தனித்து செயற்பட முடியாது.



பிக்கு ஒருவர் பௌத்த பீடம் ஒன்றில் அங்கத்தவராக இருக்க வேண்டும். அப்படி அங்கத்துவம் கொண்டவராக இருந்தால் மட்டுமே சமூகத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதோடு அரசாங்கம் சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கும் அது அத்தியவசியமானது.



இவ்வாறான நிலைமையில் அத்துரலியே ரத்ன தேரரின் பௌத்த பிக்கு என்ற அடையாளம் பாரதூரமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.



பௌத்த பீடத்தின் தீர்மானத்திற்கு அமைய செயற்பாட்டு ரீதியான அரசியலை கைவிட்டு பௌத்த பிக்கு என்ற துறவறத்தை பாதுகாத்து கொள்வதா அல்லது காவியை துறந்து வீட்டுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் ஜாதிக ஹெல உறுமயவில் இணைந்து அரசியலில் ஈடுபடுவதா ஆகிய இரண்டு தெரிவு செய்யும் நிலைமை ரத்ன தேரருக்கு ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment