புத்தளம் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் இறைச்சி விற்பனையை தற்காலிகமாக இடை நிறுத்தியிருப்பதாக வடமேல் மாகாண கால்நடை வள அபிவிருத்தி கடற்றொழில், விவசாய அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார்.
இதனடிப்படையில் புத்தளம், கருவலகஸ்வெவ, கல்பிட்டி மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளிலேயே இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு அந்தந்தப் பிரதேச உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தற்போது பரவி வரும் கால்நடைகளுக்கான ஒருவகை நோய் காரணமாகவே இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மேலும் தெரிவித்தார்.
விஷேடமாக வண்ணாத்திவில்லு கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மாட்டுப் பட்டிகளில் உள்ள மாடுகளுக்கு இவ்வாறான நோய் பரவி வருவதாக கால்நடை வைத்தியர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தமது பட்டியிலுள்ள மாடுகளுக்கு இவ்வாறான நோய்கள் பீடித்திருப்பதாக சந்தேகிக்கும் உரிமையாளர்கள் உடனடியாக அவ்வாறான மாடுகளை குறைந்த விலைக்கு வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விடயம் தெரிய வந்திருப்பதாகவும் மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக தற்சமயம் இந்நோய் பரவியுள்ள பகுதிகளிலிருந்து கால்நடைகளை வேறு பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் மாகாண அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நோய் காற்றினால் வேகமாகப் பரவி வருவதால் அந்நோயைத் தடுக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அது மிகவும் சிரமமான ஒரு காரியமாக உள்ளதாகவும் மாகாண அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் வடமேல் மாகாணத்திலுள்ள சகல மிருக வைத்தியர்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment