Wednesday, February 26, 2014

ரவூப ஹக்கீம் ஜெனிவா ஆலயத்தை வழிபடுவது ஏன்...? கேட்கிறார் முஸம்மில்



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகிந்த சிந்தனைக்கு எதிரான கட்சி என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,



தேசிய சுதந்திர முன்னணி முஸ்ஸாமில் போன்றவர்களை பயன்படுத்தி சீர்குலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். ஆனால் நாங்கள் சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. நாங்கள் வெளிப்படையாகவே செயற்பட்டும் பேசியும் வருகின்றோம்.



ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் நாட்டுக்கு எதிரான தகவல்கள் வழங்கியதாக ஹக்கீம் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது, நாங்கள் மாத்திரமல்ல அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட பலர் அவ்வாறான அறிக்கைகளை வழங்கியதாக கூறியிருந்தார்.



மேற்குலக நாடுகளிடம் இருந்து கிடைக்கும் டொலர்களை விழுங்கும் அரச சார்பற்ற நாடுகள் ஏன் அப்படி செய்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.



ஆனால் அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கும் கட்சி ஒன்றின் தலைவர் ஒருவர் அவ்வாறு செய்வதை எவ்வாறு புரிந்துகொள்வது



தேசிய சுதந்திர முன்னணி என்பது மகிந்த சிந்தனையின் கொள்கையை ஏற்றுக்கொண்டது போல், 2010 ஆம் ஆண்டின் மகிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு என்ற கொள்கையை வெற்றியடைய செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கும் ஒழுக்கமான அரசியலில் ஈடுபடும் கட்சி.



ஆனால் ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் அப்படியான கட்சியல்ல. அந்த கட்சி 2005 ஆம் ஆண்டு மகிந்த சிந்தனைக்கு எதிராக செயற்பட்ட கட்சி. அதேபோல் 2010 ஆம் ஆண்டு மகிந்த சிந்தனை எதிர்கால நோக்கு என்ற கொள்கைக்கும் எதிராக செயற்பட்டது.



இவ்வாறு மகிந்த சிந்தனைக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எந்த கொள்கையின் அடிப்படையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து அதன் சிறப்புரிமைகளை அனுபவித்து வருகிறது என்பதை கேட்க விரும்புகிறோம்.



தாம் கடைப்பிடிக்காத கொள்கையுடன் கூடிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஹக்கீம், நாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் ஜெனிவா ஆலயத்தை ஏன் வழிப்படுகிறார் என கேட்கிறோம்.



அரசாங்கத்தின் ஐக்கியம் குறித்தும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு பற்றியும் பேசினால் மாத்திரம் போதாது. அதனை செயலில் காண்பித்து ஒப்புவிக்க வேண்டும் என அமைச்சர் ஹக்கீமிடம் கோரிக்கை விடுப்பதாக முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment