ஒரு காலத்தில் இலங்கை முஸ்லிம்களுகென்று தனியான செய்தி இனைய தளங்கள் இருக்கவில்லை, முஸ்லீம்களின் செய்திகளை அறிய தமிழ் சகோதர்களின் இனையதளங்களை நாட வேண்டிய துரதிஷ்ட நிலை பல தசாப்தங்களாக இருந்தமை யாராலும் மறுக்க முடியாது.
காலப்போக்கில் ஊடகத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டதன் பலனாக சில இனைய தளங்கள் உருவாகின. உதாரணமாக ஜப்னா முஸ்லிம், மடவள நியூஸ், காத்தான்குடி இன்போ, மற்றும் சோனகர் போன்றவைகளை குறிப்பிடலாம் .ஊடக துறையில் நீண்ட காலம் நீடித்திருந்த இடைவெளி நிரப்பப்பட்டு விட்டது என்ற ஒரு உணர்வு நம் சமூகத்தில் ஏற்பட்டது.
தாமதமான பிரவேசம் என்றாலும் குறிய காலத்தில் நல்ல பல பணிகளை மேற்கொண்டு வந்த மேற்படி இணையதளங்கள், கட்சி வேறுபாடுகள் இன்றியும், இஸ்லாமிய இயக்க வேறுபாடுகளின்றியும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் நலனை கருத்தில் கொண்டு செய்திகள் பிரசுரித்து வந்தன.
அண்மைக்கால இனவாத செயற்பாடுகளை காலதாமதமின்றி செய்தி வெளியிட்டு, முஸ்லீம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வையும் பல கூறுகளாக பிரிந்திருந்த முஸ்லிம்களை ஐக்கியப்படுத்தியும் வந்தன.
ஆனால், காலப்போக்கில் இயக்க வெறிகொண்ட சில விஷமிகள் மாற்று இயக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இயக்க விமர்சனங்களை கொட்டிட மேற்படி இணைய தளங்களை நாடினர். தவறை சுட்டிக்காட்டுதல் என்ற தொனியில் இல்லாத பொல்லாத செய்திகளை அனுப்பி மாற்று இயக்கத்தின் மீதி தமது பகையை கொட்டித்தீர்த்தனர்.
மேற்படி இணைய தளங்களும் ஏதாவது கட்டுரைகளையும் செய்திகளையும் பிரசுரித்தால் தானே வண்டி ஓடும் என்பதற்காக, தமக்கு வந்து குவியும் விமர்சனக் கட்டுரைகளையும், பொய்யான தகவல்களையும் ஆய்வு செய்யாமல் பிரசுரித்து, இயக்க விஷமிகளுக்கு களம் அமைத்துக்கொடுத்தன.
இனவாதம் உச்சகட்ட நிலை அடைந்திருக்கும் நிலையில் உள் வீட்டு சண்டைகளை செய்தியாக வெளியிட்டு, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் இணையங்களாக மாறி வருகின்றமை முஸ்லிம் சமுகத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்திகளை உள்வாங்கும் விடயத்திலும் அவைகளை பிரசுரிக்கும் விடயத்திலும் இஸ்லாம் போதிக்கும் பண்புகளை படிப்படியாக தவிர்த்து வருகிறது என்பதற்க்கு அண்மைக்காலமாக வெளியாகி வரும் இயக்கவாத செய்திகள் நல்ல சான்று.
இது தொடரும் பட்சத்தில் மேற்படி இணையங்களே நம் சமுகத்துக்கு சாபமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, கட்சி சார், இயக்கம் சார் நலனுக்காக குரல் கொடுக்காமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் நலனுக்காக இயங்கும் இணைய தளங்களையே நம் சமுகம் எதிர்பார்க்கின்றது என்பதை இணைய தள ஸ்தாபகர்களும் அதன் நிருவாகிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
இயக்க விமர்சனம் சார்ந்த செய்திகளை தவிர்த்து, ஒட்டுமொத்த முஸ்லீம்களின் நலனை கவனத்தில் கொண்டு, சமூகத்துக்காக குரல் கொடுக்கும் இணைய தளங்களாக மக்கள் மன்றம் சென்றடைய வேண்டிக்கொள்கிறேன்.
அம்மார் அஹ்மத்.
No comments:
Post a Comment