மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனியாக பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்த வேண்டியதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஏதேனும் அமைப்பு அல்லது இயக்கங்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டில் சட்டங்கள் காணப்படுகின்றன. பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பொலிஸாருக்கு அதிகாரமுண்டு. ஏதேனும் ஓர் சம்பவம் இடம்பெறும்போது அதற்கு தீர்வு காண அரசியல் நோக்கத்துடன் பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டால், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
ஒவ்வொரு சேனாக்களையும் பாதுகாப்பதற்காக பொலிஸ் பரிவுக் உருவாக்கப்பட்டால் அதில் பயனில்லை. அதன் மூலம் மத நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் தற்போது உள்ள சட்டங்களை பொலிஸார் உரிய முறையில் அமுல்படுத்தினாலேயே பிரச்சினைகள் ஏற்படுவதனை தடுக்க முடியும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணைப் பிரிவு நிறுவியதனை ஓர் நகைச்சுவையாகவே நோக்குகின்றோம் - ஜே.வி.பி.
மத செயற்பாடுகள் குறித்த பொலிஸ் பிரிவு நிறுவப்பட்டதனை ஓர் நகைச்சுவையாகவே நோக்கி வருவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
ஒரு புறத்தில் அரசாங்கம் உத்தியோகப் பற்றற்ற பொலிஸாருக்கு அதிகாரங்களையும் அனுசரணையையும் வழங்கி வருகின்றது என ஜே.வி.பி பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே உயர் பொலிஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கும் போதே உத்தியோகப் பற்றற்ற பொலிஸார் சண்டித்தனம் காட்டுகின்றனர். கடந்த காலங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தனியான பொலிஸ் பிரிவு உருவாக்கி மத செயற்பாடுகளை கண்காணிப்பது நகைப்பிற்குரியது.
ஏழு பேரைக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினால் என்ன செய்ய முடியும். பெக்ஸ்களையும் முறைப்பாடுகளையும் திரட்டிக் கொள்ள முடியும். குற்றச் செயல்கள் இடம்பெறும் போது பொலிஸ் பிரிவுகளை உருவாக்குவதா அரசாங்கத்தின் அணுகுமுறை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கை பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment