Wednesday, April 30, 2014

கொழும்பு மாவட்டம் குறித்து வெளியாகியுள்ள எச்சரிக்கை



நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் நிலமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமையான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் முன்னரே எச்சரித்திருந்தனர்.



உலகின் சில பகுதிகளில் கடல்நீர் மட்டம் அதிகரிப்பதைவிட, நிலம் உள்ளிறங்குவது என்பது மோசமான பிரச்சினையாக மாறிவருவதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் விஞ்ஞான ஒன்றிய அவையின் கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.



சில கடலோர நகரங்களில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத்தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக அவர்கள் எச்சரித்திருந்தனர்.



இந்த நிலம் உள்ளிறங்குவதற்கு பெருமளவு மனிதனே நேரடி காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



உதாரணமாக டோக்கியோ நகரில் வரைமுறையின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்ததால், அந்நகரின் நிலமட்டம் சில இடங்களில் சுமார் இரண்டு மீட்டர் ஆழத்துக்கு உள்ளிறங்கியது. ஒருவழியாக அங்கு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கு கடும் தடை விதிக்கப்பட்ட பிறகே நிலம் உள்ளிறங்கும் செயல் நின்றது.



டோக்கியோ நகரைப்போலவே ஜகார்தா, ஹோ சி மின் நகரம், பேங்காங் உள்ளிட்ட பல நகரங்களிலும் நிலம் உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதைத் தடுக்க வேண்டுமானால், நிலத்தடி நீரை வகை தொகையில்லாமல் உறிஞ்சி எடுப்பதை குறித்த நகரங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக வேறு நீராதாரங்களைக் கண்டறிந்து பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.



BBC


No comments:

Post a Comment