சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் நாட்டிற்குள் இனக்கலவரத்தை ஏற்படுத்துவது சர்வதேச விசாரணைக்கு வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கும் ஜே.வி.பி. ஜனநாயகம் பற்றி பேச இந்த அரசாங்கத்திற்கு தகுதியில்லை எனவும் தெரிவித்தது. நாட்டை பாதுகாக்கவே சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோமே தவிர அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கல்ல எனவும் ஜே.வி.பி. சுட்டிக் காட்டியது.
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்குழு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டினை வினவிய போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் சதிவலையினை போட்டு நாட்டை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். சர்வதேச விசாரணையொன்று இலங்கையில் இடம்பெறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகின்றோம். இதில் மாற்றம் எதுவுமில்லை. எனினும் எமது முடிவு இந்த நாட்டை பாதுகாக்கவே தவிர இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அல்ல. சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதனால் இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைகள் எவையும் தீரப்போவதில்லை.
உண்மையிலேயே இந்த அரசாங்கத்தின் சூழ்ச்சியினால் தான் நாட்டில் இன முரண்பாடுகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றது. இனவாத அமைப்புகளையும் இனவாதத்தினையும் பரப்பி சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை கையாள்கின்றனர். இதை நாம் போராடி கட்டுப்படுத்த வேண்டுமே தவிர சர்வதேச அளவில் முறையிடுவதால் நடக்கப் போவது ஒன்றுமில்லை.
சர்வதேச அழுத்தங்களில் தற்போது நாடு சிக்குண்டு இருக்கின்றது. யுத்த குற்றங்கள் மட்டுமன்றி அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பிலும் சர்வதேச மட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தக் கோரியுள்ளனர். இது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆசிய கட்சிகள் பல அறிக்கைகளை வெளியிட்டு இலங்கையின் அடக்குமுறை சம்பவங்களை சர்வதேச மட்டத்தில் கொண்டு சென்றுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் மேலும் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகின்றமையும் நாட்டில் இனக்கலவரம் தோற்றுவிக்கப்படுகின்றமையும் சர்வதேசத்தின் நோக்கத்திற்கும் அவர்கள் எதிர்பார்க்கும் சர்வதேச விசாரணைக்கும் வாய்ப்பாக அமைந்து விடும்.
அரசாங்கம் தொடர்ந்தும் தவறிழைத்துக் கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிவடைந்தும் அடக்கு முறைகளை கையாண்டு மோசமானதொரு ஆட்சியினை நடத்தி வருகின்றது. சர்வதேச மட்டத்தில் ஜனநாயகம் அமைதி என எமது நாட்டின் தலைவர் பேசுகின்றார். ஆனால் நாட்டிற்கு உள் சர்வாதிகாரமும் அடக்கு முறைகளும் கையாளப்படுகின்றது. உண்மையிலேயே ஜனநாயகம் பற்றி பேசும் உரிமை இந்த அரசாங்கத்திற்கு இல்லை. மக்களை பாதுகாக்கத் தெரியாத மக்களின் உரிமைகளை மதிக்கத் தெரியாத ஒரு மோசமான ஆட்சியினையே இந்த அரசாங்கம் நடத்தி வருகின்றது. இதற்கு எதிராக மக்களே போராடி உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டையும் மக்களையும் காப்பாற்ற மக்களே இன மொழி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும். இனவாதம் என்பதை அரசாங்கம் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று நிலவும் முரண்பாடுகள் மேலும் இந்த நாட்டில் கொண்டு செல்லப்படுமாயின் இன்னும் சிறிது காலத்தில் இந்த நாடே அழிந்து விடும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment