தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை வெறுத்து, விலகி செல்லும் திட்டத்தை மேற்குலகம் நடைமுறை படுத்துகின்றது என்றும், அளுத்கம கலவரத்தை சவூதி அரேபியா மூலமாக அமெரிக்கா தூண்டி விட்டுள்ளது என்றும், இதன்மூலம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகளை மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்காமல் செய்ய மேற்குலகம் சதி செய்கின்றது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
உண்மையில் தமிழ் பேசும் மக்கள் இந்த அரசை விட்டு விலகிச் செல்ல, விமல் வீரவன்சவே போதும். இவரும், இவரை போன்ற இந்த அரசில் உள்ள தீவிரவாத கட்சிகாரர்கள் செய்யும் காரியங்களே அரசாங்கத்தில் இருந்து, தமிழ், முஸ்லிம் மக்களை தூரத் தள்ளி வைக்கின்றன.
அதற்கு புதிதாக அமெரிக்கா வந்து சதி செய்ய தேவையில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மாவனல்லையில் நேற்று நடைபெற இருந்த பொதுபல சேனாவின் உண்ணாவிரதம் பொலிஸ் தடை உத்தரவின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த உண்ணாவிரத போராட்டம் நடந்து இருக்குமானால், அந்த பகுதியில் கலவரம் மூண்டிருக்கும் என பொலிஸ் முன்னெச்சரிகை நடவடிக்கை எடுத்துள்ளது. இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
இதைதான் இந்த பொலிஸ் அளுத்கமையில் நடந்த பொதுபல சேனாவின் பொதுக்கூட்டத்துக்கு எதிராக செய்திருக்க வேண்டும். நீதிமன்ற தடை உத்தரவை வாங்கி கூட்டத்தை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.
இதைத்தான் நான் இங்கே சொன்னேன். இன்று, நேற்று சொல்லவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளுத்கமையில் ஒரு கடை எரிக்கப்பட்ட வேளையிலே சொன்னேன். அப்போதே பொதுபல சேனையின் நடவடிக்கைகள் அந்த பகுதியில் ஆரம்பமாகி இருந்தன.
ஆனால், பொலிஸ் அதை செய்யாமல் கடமை தவறி விட்டது. இதனால் இன்று ஆறு அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டு, ஐம்பது பேர் காயமடைந்து, பல நூறு கோடி ரூபாய்களுக்கு மேலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் எதிர்க்கட்சியினர், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு எதிரில் கூட்டம் கூடி, ஜனநாயக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தபோது, அதற்கு எதிராக போலிஸ் தடை உத்தரவு வாங்கியுள்ளது.
கடந்த காலங்களில் மூன்று முறை என்னை தேடி வந்து எனது கரங்களில் நீதிமன்ற தடை உத்தரவை கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிபர் நேரடியாக கையளித்துள்ளார். ஏனைய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் தந்துள்ளார்.
இதை கொழும்பில் செய்யும் பொலிஸ், அளுத்கமையில் தூங்கிவிட்டது ஏன்? அவர்களை போர்த்தி கொண்டு தூங்க சொன்னது யார்? இந்த கேள்வி இன்று இந்நாட்டில் வாழும் அனைத்து மக்கள் மனங்களில் எழுகின்றது. இதற்கு பொதுபல சேனாவின் ஞானத்தந்தையாக செயற்படும் பாதுகாப்பு செயலாளர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
கடந்த தினங்களில் நடைபெற்றுள்ள சம்பவங்கள், உலகின் கவனத்துக்கு சென்று, இன்று அரசாங்கத்துக்கு பெரும் தலையிடியை கொடுத்துள்ளன. இனிமேல் இந்த நாட்டில் இனகலவரம் என்ற ஒன்று நடக்க கூடாது.
மனிதர்களை கொலை செய்வதோ, வியாபார நிலையங்களை, வீடுகளை, எரிப்பதோ, உடைப்பதோ, கொள்ளையடிப்பதோ இனி ஒருநாளும் இங்கு நடக்க கூடாது.
இதை நாம் உறுதியாக எதிர்ப்பதன் மூலம் தான் இந்த கலவரங்கள் இந்த நாட்டின் எந்த ஒரு மூலையிலும் இனி நடைபெறாமல் தடுக்க முடியும். சிறுபான்மை மக்களை தாக்கி அழித்துவிட்டு தப்பி விடலாம் என இனி எவரும் கனவு கனவு கூட காண முடியாத நிலைமையை நாம் உருவாக்க வேண்டும்.
இனிமேல் இந்த நாட்டில் எந்த மூலையில் எந்த ஒரு சிறுபான்மை பிரதேசத்திலும் கலவர சூழலை எவரும் ஏற்படுத்தினால் அதை உடனடியாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வரும்படி நான் சிறுபான்மை மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். நாங்கள் உடனடியாக பொலிஸ் தடை உத்தரவை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்குவோம்.
நமது ஒட்டுமொத்த கூட்டு எதிர்ப்பின் மூலம்தான் இன்று, பொதுபல சேனாவின் தலைவர், அதன் பொதுசெயலாளர் ஞானசார தேரரை விட்டு விலக தீர்மானித்துள்ளார். இன்று சிங்கள மக்கள் மத்தியில் உள்ள நல்லெண்ணம் கொண்டவர்கள் வெளியில் வந்து ஞானசார தேரரின் நடவடிக்கைகளை எதிர்க்கிறார்கள் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment