அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக ஏஎவ்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரங்கள், தாக்குதல்கள் சம்பவங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் இவர்களிடமிருந்து கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட இரத்தினக்கற்கள் மற்றும் தங்கநகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அளுத்கம பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களின் போது கடைகளில் பொருட்கள் மற்றும் தங்கநகைகள் என்பனவற்றை கொள்ளையிட்டவர்கள், தீயிட்டவர்கள் என நம்பப்படுவோரை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் அவர்கள் கொள்ளையிட்ட பொருட்கள் சகிதம் பொலிஸார் கைது செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அளுத்கம பகுதியில் ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் பின்னர் பேருவளை, பெந்தோட்டை பிரதேசங்களுக்கும் பரவியதை தொடர்ந்து அங்கு பல கடைகள் எரிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் உள்ளன.
மேலும் பெந்தோட்டை பகுதியிலுள்ள இரண்டு ஆபரண விற்பனை நிலையங்கள் கலகக்காரர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment