ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வடக்கே உள்ள கோஸ்போர்ட் என்ற நகரத்தில் 28 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் இறந்துள்ளார் என்ற செய்தி காவல்துறைக்குக் கிடைத்தது.
இறப்பிற்கான காரணத்தை அறிய அங்கு சோதனையிடச் சென்ற காவல்துறையினர் அந்தப் பெண் மடியில் தனது லேப்டாப்பை வைத்திருந்த வண்ணம் இறந்திருப்பதைக் கண்டார்கள். அவரது காதுகளில் ஹெட்போன் பொருத்தப்பட்டிருந்தது. அவரது ஸ்மார்ட் போன் ஒன்றும், லேப்டாப்பும் சார்ஜரில் பொருத்தப்பட்டிருந்தன.
இறந்திருந்த பெண்ணின் காதுகளிலும், மார்புப்பகுதியிலும் தீக்காயங்கள் காணப்பட்டன. இன்னமும் அவரது இறப்புக்கான காரணங்களைக் காவல்துறையினர் கண்டறிய முடியாமல் தடுமாறி வருகின்றனர். ஆனால் இந்த வழக்கில் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்ட நியாய வர்த்தகத்துறை அலுவலகம் தரமற்ற மொபைல் சார்ஜரின் பயன்பாடே இந்த மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தரமற்ற யுஎஸ்பி வகை சார்ஜரில் அந்தப் பெண் போனை இணைத்துள்ளார். இந்த சார்ஜர் சரிவர செயல்படாமல்போனதால் அந்தப் பெண்ணின் மீது மின்சாரம் தாக்கியிருக்கக்கூடும். அவரது காதுகளிலோ அல்லது கைகளிலோ போனை வைத்திருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நியூ சவுத்வேல்ஸ் அலுவலகத்தின் தலைவரான லைநெல் கொலின்ஸ் தெரிவித்தார். ஒருவரது போன் சார்ஜ் செய்யப்படும்போது அதனை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்றும், தரமற்ற சார்ஜர்களை வாங்குவது கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண் சமீபத்தில்தான் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றுள்ளார் என்று குறிப்பிட்ட கொலின்ஸ் இவரது மரணத்திற்குப் பின் சந்தையில் இருந்த பாதுகாப்பற்ற பல தயாரிப்புகள் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment