Wednesday, June 18, 2014

முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது அரசாங்கம் அழுத்தம் - ஹரீஸ்



(ஹாசிப் யாஸீன்)



அளுத்கம தர்கா நகர், பேருவளை சம்பவத்திற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அரசாங்கத்திற்கு பலமான எதிர்ப்பை இன்று பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்ததன் மூலம் காட்டியுள்ளோம் என திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினா் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.



இது பற்றி அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில்,



அளுத்கம தர்கா நகர், பேருவளை சம்பவத்திற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அரசாங்கத்திற்கு பலமான எதிர்ப்பை காட்டுவதற்காக பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பதென நேற்று கட்சிப் பாராளுமன்ற உறுப்பினா்கள் தீா்மானித்தோம். அதற்கமைவாக இன்று பாராளுமன்றத்தை அனைவரும் பகிஷ்கரித்தோம்.



பாராளுமன்றத்தில் அரசாங்த்திற்கு எதிராக யுத்தக் குற்றம் பற்றி விசாரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதா? இல்லையா? என்ற பிரேரணைக்கான வாக்களிப்பு இன்று இருந்தும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதை விட எம்சமூகத்தை பாதுகாப்பதே எமது முதற் கடமையாகவிருந்தது. இதனைக் கருத்திற்கொண்டே பாராளுமன்றத்தை பகிஷ்கரித்தோம்.



அவ்வாறிருந்தும் இப்பிரேரணைக்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பல அளுத்தங்கள் எங்கள் மீது பிரயோகிப்பட்டன. அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எவரும் செவிசாய்க்காமல் அரசாங்கத்திற்கு உறைக்கும் விதத்தில் எமது எதிர்ப்பைக் காட்டியுள்ளோம்.



முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் சம்பந்தமாக அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்கவேண்டும். இதற்கு உரிய தீர்வு எட்டப்படாவிட்டால் அரசாங்கத்திற்கான அளுத்தம் மேலும் தீவிரப்படுத்தப்படும்.



அளுத்கம தர்கா நகர், பேருவளை சம்பவத்தினை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த ஐக்கிய நாடுகள் சிறுபான்மை மத உரிமைகள் சபையினரை நாட்டு வரவழைத்து விசாரணை நடாத்த கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கான தடையினை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மேலும் இப்பிரச்சினைகளை சர்வதேச நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளதுடன் மக்களை ஓரணியில் திரட்டி அரசாங்கத்திற்கு அளுத்தம் கொடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment