அண்மையில் அலுத்கம மற்றும் பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணைகளில் நம்பிக்கையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் குறித்து பிரதேச மக்களுக்கும் கட்சிக்கும் நம்பிக்கைக் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் மெய்யான தகவல்களை விசாரணைக் குழு ஒன்றினால் மட்டுமே வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைக்குழு விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்பிக்க குறிப்பிட்டளவு கால எல்லையொன்று நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுளளார். அலுத்கம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இரண்டு முஸ்லிம்களின் இறப்புச் சான்றிதழ்களில், கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், விசாரணைகளில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே, ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றின் மூலம் மெய்யான தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment