அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு தூண்டுதலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை கைது செய்ய அரச புலனாய்வு சேவை நடவடிக்கை எடுத்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 12ம் திகதி நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் அனுரகுமார திஸாநாயக்க ஆற்றிய விசேட உரையின் போது “அடித்தல் திருப்பி அடியுங்கள்” எனக் கூறி முஸ்லிம்களை தூண்டியதாக அரசாங்கத்தின் வார இதழ் பிரதான செய்தியை வெளியிட்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்ட இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என ஜே.வி.பியின் தலைவர் ஏற்கனவே மறுத்துள்ளார்.
அவரது இந்த மறுப்பை அடுத்து குழப்பமடைந்துள்ள அரச புலனாய்வு சேவையின் அதிகாரிகள், அனுரகுமாரவின் முழு உரையும் அடங்கிய காணொளியை தமக்கு வழங்குமாறு அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
எனினும் குறித்த மாநாட்டில் ஜே.வி.பியின் தலைவர் அப்படியான கருத்துக்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை என அரச தொலைக்காட்சியினர் அரச புலனாய்வு சேவையின் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அரச புலனாய்வு சேவையின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாகிஸ்ட்ட, ஜே.வி.பியின் தலைவர் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளாரா என்பதை கண்டறியுமாறு கீழ் நிலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
லண்டன் ஈஸ்ட்ஹாம் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் அமைப்பின் அழைப்பில் அங்கு சென்று பேசிய அனுரகுமார திஸாநாயக்க அப்படியான கருத்துக்களை வெளியிட்டாரா என்பதை கண்டறியுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் தலைவராக கடந்த பெப்ரவரி மாதம் தெரிவாகிய பின்னர், கட்சியின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலைமையில், அரசாங்கம் தனக்கும் கட்சிக்கும் எதிராக சேறுபூசும் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அனுரகுமார திஸாநாயக்க, தானோ கட்சியில் உள்ள வேறு எவருமோ அப்படியான கருத்துக்களை வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment