Tuesday, September 2, 2014

120 நிமிடங்கள் நீந்தி ஆற்றை கடந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது, கணவரின் விருப்பத்துக்காக உயிரை பணயம் வைத்ததாக பேட்டி



இந்தியா - கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றை சுமார் 120 நிமிடங்கள் நீந்தி கடந்த ஏழை பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.



தன்னுடைய கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக உயிரை பணயம் வைத்து ஆற்றில் குதித்தேன் என நீச்சல் தெரியாத அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.



கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் சுராப்பூர் அருகே நீலகண்ட நாராயணகட்டி என்ற கிராமம் உள்ளது. மாராத்தி மொழி பேசுவோர் வாழும் இக்கிராமத்தை சேர்ந்தவர் கட்டி பாலப்பா (36). இவரின் இரண்டாவது மனைவி எல்லவ்வா (22).



மிகவும் பின் தங்கிய பகுதியான நீலகண்ட நாராயணகட்டியில் மருத்துவ வசதியோ, போக்கு வரத்து வசதியோ கிடையாது. அவசர மருத்துவ தேவைக்கு அருகி லுள்ள கெக்க கேரா-விற்கு செல்ல வேண்டும்.இந்த இரு கிராமங் களுக்கும் இடையில் கிருஷ்ணா ஆறு ஓடுவதால் மழைக் காலத்தில் ஆற்றை கடக்க முடியாது.



எல்லவ்வாவின் துணிச்சல்



கடந்த ஜூலை மாதம் பெய்த கன‌மழையின் காரணமாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடியது. இதனால் நீலகண்ட நாராயணகட்டி கிராமத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்து வசதிகள் முற்றிலும் முடங்கி கிராம மக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். நாளுக்கு நாள் வெள்ளம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.



இதனால் 9 மாத‌ கர்ப்பிணியாக இருந்த எல்லவ்வா-விற்கு அச்சம் தொற்றிக் கொண்டது. மருத்துவ மனைக்கு போகாமல் இங்கேயே இருந்தால் குழந்தையை உயிருடன் பெற்றெடுக்க முடியாது. எனவே அவர் ஆற்றை கடக்க முடிவு செய்தார். இதனை குடும்பத்தாரும் கிராமத்தாரும் எதிர்த்தனர்.



ஆற்றில் அளவுக்கு அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தால் படகு ஓட்டுநர்கள் ஆற்றில் இறங்க மறுத்தனர். எனவே கடந்த ஜூலை 31-ம் தேதி எல்லவ்வா தனது தம்பி லட்சுமண், தந்தை ஹனு மப்பா, உறவினர்கள் சிலரின் உதவியுடன் ஆற்றில் இறங்கினார்.



கயிறு மற்றும் சுரைக்குடு வையை கட்டிக்கொட்டு சுமார் 16 அடி ஆழமுள்ள கிருஷ்ணா ஆற்றில் துணிச்சலுடன் குதித்தார். 700 மீட்டர் நீளமுள்ள ஆற்றை சுமார் 120 நிமிடங்கள் மூச்சிறைக்க‌ நீந்தி கடந்துள்ளார். குளிரிலும்,உடல் வலியிலும் துடித்த அவரைக் கண்டு மறுகரையில் நின்றவர்கள் அதிர்ந்து போயினர்.



ஆண் குழந்தை பிறந்தது



அவ‌ருக்கு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மிகவும் மெலிந்திருந்த அவருடைய உடலில் போதிய ரத்தம் இல்லாததால் மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எல்லவ்வாவை அவரது குடும்பத்தினர் ரெய்ச்சூர் மாவட்டம் லிங்கசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.



அங்கு அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.20 மணியளவில் அறுவை சிகிச்சையின் மூலம் 4 கிலோ எடையுள்ள ஆண்குழந்தை பிறந்தது.



தனது சாகச முயற்சி குறித்து எல்லாவ்வா கூறியாதாவது: ''என்னோட கணவர் பாலப்பாவுக்கு நான் இரண்டாவது மனைவி. முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் என்னை திருமணம் செய்தார். எனக்கு திருமணாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை. நான் கர்ப்பமானதும் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க நினைத்தேன்.



எனக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது. துணி துவைக்க மட்டுமே ஆற்றுக்கு போய் இருக்கிறேன். ஆனால் ஆற்றைக் கடந்து ஆஸ்பத்திரிக்கு போகணும்னு முடிவு பண்ணினேன். அதனால என் உயிரை பற்றி கவலைப்படாமல் இடுப்பில் சுரைக்குடுவைக் கட்டிக்கொண்டு குதிச்சேன். குதிக் கிறதுக்கு முன்னாடி கடவுளையும் என் வீட்டுக்காரரையும் மனசுக் குள்ள நெனச்சிக்கிடேன்.



ரொம்ப குளிராகவும் பயமாக வும் இருந்தது. என் தம்பியும், அப்பா வும் எப்படி நீச்சல் அடிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதே மாதிரி நீந்தி வந்தேன். அப்பப்போ என்னை அவங்க பிடிச்சிக்கிட் டாங்க. என் மனசுல குழந்தையை நல்லபடியே பெத்து எடுக்கனும். அது மட்டும்தான் இருந்துச்சி'' என்றார்.



எல்லாவ்வாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஹெஸ்ரூரிடம் 'தி இந்து'விடம் கூறியபோது,''பிரசவத்தின் போது எல்லவ்வா மிகவும் சோர்வடைந்து இருந்தார்.அறுவை சிகிச்சையின் மூலமாகவே குழந்தையையும் தாயையும் உயிரோடு காப்பாற்ற‌ முடியும் என்ற நிலையில் இருந்தார். அதனால் தான் அறுவை சிகிச்சை செய்தோம்.தற்போது தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள்.



அந்த பெண்ணின் துணிச்சலை கேள்விப்பட்டு பிரமித்து போனேன்.அவரது குடும்ப சூழ்நிலையையும் பொருளாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு அவரிடம் மருத்துவ கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறோம்'' என்றார்.



புகைப்படம் எடுத்தது எப்படி?



எல்லவ்வா 9 மாத கர்ப்பிணியாக ஆற்றில் நீந்தி வந்தபோது சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அதனை மறுக்கரையில் இருந்து கவனித்த சிலர் அங்கிருந்த கன்னட நாளிதழின் நிருபருக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படமெடுத்துள்ளார்.


No comments:

Post a Comment