Tuesday, September 2, 2014

சினிமா என்ற ஊடகம் ஹராம் அல்ல...!



-Editör Alaudeen-



வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சலீம் திரைப்படம் நமக்கு ஒரு நல்ல தொடக்கம். அதில் இடம் பெற்ற வசனங்கள் பலரால்,பல இயக்குனரால் பேசப்படுகிறது.



இதுபோல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை திரைப்படத்தில் உதுமானாக நடித்த இயக்குனர் சமுத்திரகனி சொல்வார் “நீங்க பெரிய கூட்டம் போட்ட, அது போராட்டம்; ஆனா, நாங்க(முஸ்லிம்கள் ) நாலு பேரு கூடினா தீவிரவாதமா?என்று

ஒரு கேள்வி எழுப்புவார்.



சலீம், நீர்ப்பறவை தொலைக்காட்சியில் என்றெல்லாம் ஒளிபரப்பப்படுகிறதோ அன்றெல்லாம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த வசனங்கள் கேட்பார்கள், சிந்திப்பார்கள்.



சினிமா என்பது தமிழ்,ஹிந்தி படங்களை பார்த்துக்கொண்டு ஆபாசம் என்று சொல்கிறோம். ஹாலிவுட் படங்களிலும் இப்படிப்பட்ட அனாச்சாரங்கள் இருந்தாலும் அதே ஹாலிவுட்டில் தான் மெசேஜ், உமர்முக்தார் படங்கள் வந்து மக்களிடையே பெரும் ஒரு தாக்கங்களை ஏற்படுத்தின.



(ஹாலிவுட் ஆபாசப்படங்களிலும் மெசேஜ்,உமர்முக்தார் போன்ற இப்படிப்பட்ட படங்கள் கொடுக்கலாம் என்று முஸ்லிம்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார் இப்படத்தின் இயக்குனர் முஸ்தபா அஹத்) சினிமாவின் வலிமை நமக்கு தெரியாவிட்டாலும் இஸ்ரேல், அமெரிக்க போன்ற நாடுகள் தங்கள் செயல்களை நியாயப்படுத்தி சினிமா எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.



உமர் முக்தார் படத்தை இயக்கிய இயக்குனர் எனது அடுத்த திரைப்படம் பாலஸ்தீன் மாவீரன் சலாஹுத்தின் அய்யூபி அவர்களின் வரலாறு என்று சொன்னதும் இஸ்ரேல் நடுங்கியது.



இந்த படம் எடுக்கப்பட்டால் இஸ்ரேல் என்ற நாடு ஒன்று இல்லாததையும், நாம் அகதிகள் தான் என்பதையும் உலக மக்கள் அறிந்துகொள்வார்கள் என்று பயந்து அந்த இயக்குனரை ஜோர்தான் ஹோட்டலில் குண்டு வைத்து கொலை செய்தார்கள்.



இதன் மூலம் சினிமா என்பது எவ்வளோ வலிமையான ஊடகம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.



சினிமா என்பது தமிழ்,ஹிந்தி சினிமாவில் வரும் ஆபாசம் மட்டும் இல்லை. மெசேஜ்,உமர்முக்தார் படங்களும் சினிமாதான்.



அமெரிக்க வெளிவுறவு கொள்கை எவ்வளோ நியாயமானது என்று ரேம்போ 2, ரேம்போ 3 படங்கள் எடுத்து உலகத்திற்கு காட்டியது.



தவறுகளை நியாயப்படுத்த அமெரிக்க போன்ற நாடுகள் சினிமாவைத்தான் ஆயுதமாக எடுக்கிறார்கள்.



ஆரம்ப கால தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற கலைஞர்கள் திரைப்பட பாடல்கள், கதைகள் மூலம் கம்யூனிஸ கொள்கை பிரச்சாரமாக சினிமாவை எடுத்தார்கள்.



பின்னர் அண்ணாதுரை போன்ற திராவிட சிந்தனையாளர்கள் நுழைந்து திராவிட கொள்கைப் பிரச்சார கருத்துக்களை திரைக்கதையாக, பாடலாக தந்தார்கள் அப்போதுதான் கம்யூனிஸ கொள்கை பின்வாங்கியது.



பின்னர் பிராமணிய இயக்குனர்கள் வந்தார்கள்.



உலகறிந்த சிவாஜி கணேசனை வைத்து திருவிளையாடல், திரு.நீலகண்டன், கந்தன் கருணை, போன்ற பக்தி படங்கள் கொடுத்தார்கள்.



இப்படி உலகில் அனைவரும் தனது தவறை நியாயப்படுத்தவும், தனது கொள்கைகளை, வரலாற்றை மக்களுக்கு காட்டவும் பயன்படுத்துகிறார்கள்.



நாம் மட்டும் நமது வரலாறுகளை, நமது நியாயங்களை இந்த ஊடகத்தில் சொல்லாமல் விலகி நிற்கிறோம்.



(கேமரா என்ற அதிநவீன கருவியே கண்டுபிடித்த முஸ்லிம்கள் மட்டும் சினிமாவில் இருந்து விலகி நிற்கிறோம்.)



மனிதனை தன்பக்கம் இழுக்கும் சினிமா என்ற ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் தான் ஹராமானவர்கள் தவிர சினிமா என்ற ஊடகம் ஹராம் அல்ல என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும்.



கேமரா (கமரா) என்ற அரபு வேர்ச்சொல்லோடு கேமராவை கண்டுபிடித்தவர் 10 ஆம், நூற்றாண்டில் வாழ்ந்த முஸ்லிம் அறிஞ்ர் இப்னு அல் ஹாத்தம் என்பது எத்துனை முஸ்லிம்களுக்கு தெரியும்?


No comments:

Post a Comment