அமைதியை விரும்பும், வன்முறையற்ற மரபணு இந்திய சமூகத்தில் ஆழமாகவே வேரூன்றியுள்ளது என்று ஜப்பான் மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாதது குறித்து மாணவர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது மோடி இவ்வாறு தெரிவித்தார்.
ஜப்பானில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, டோக்கியோவில் உள்ள சேக்ரெட் ஹார்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.
அப்போது ஒரு மாணவரின் கேள்வியொன்றுக்கு மோடி பதிலளிக்கையில், ""இந்தியா புத்தர் அவதரித்த பூமியாகும். அமைதிக்காக வாழ்ந்த அவர், அதற்காகத் தன்னையே வருத்திக்கொண்டார். அவரது போதனை இந்தியா முழுவதும் பரவியுள்ளது'' என்றார். அப்படியானால், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட மறுத்துள்ள இந்தியா, சர்வதேச சமூகத்திடம் எப்படி இத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தும்? என்று அந்த மாணவர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.
அதற்கு ஜப்பானை உதாரணமாக கூறிய மோடி, ""அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு ஜப்பான்தான். இதன்மூலமே, அணுசக்தியை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற செய்தி உலகுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தியா என்.பி.டி.யில் கையெழுத்திட மறுப்பதற்கு காரணம், அந்த ஒப்பந்தத்தில் குறைபாடு இருப்பதாக கருதுவதேயாகும்.
இந்தியா முற்றிலும் வன்முறையற்ற உலகையே விரும்புகிறது. இந்த எண்ணம், இந்திய சமூகத்தின் மரபணுவில் ஆழப் பதிந்துள்ளது. இது, எத்தகைய சர்வதேச உடன்படிக்கையை விடவும் மேலானது'' என்றார்.
No comments:
Post a Comment