இஸ்லாமியப் போராளிகளால் தாக்கப்பட்டு வரும் சின்ஜியாங் மாகாணத்தில் ஒற்றுமை உணர்வு வளரும்விதமாக அங்குள்ள சிறுபான்மை பழங்குடியினருக்கும், பெரும்பான்மையாகக் காணப்படும் ஹன்ஸ் இனத்தவருக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதை சீன அரசு ஆதரித்து வருகின்றது.
இந்த மாகாணத்தில் உள்ள குயிமோ மாவட்ட அரசு நிர்வாகம் இந்த மாதிரியான கலப்பு மண ஜோடிகளுக்கு சமூக நலன்களைத் தவிர ஆண்டுக்கு 10,000 யுவான்கள் வீதம் ஐந்து வருடங்களுக்கு ரொக்கத் தொகையும் அளிக்கின்றது.
இத்தகைய கலப்புத் திருமண ஜோடிகளுக்கு வீடு, கல்வி, வேலை மற்றும் சமூக நலன்கள் போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பு சலுகை வழங்கப்படுகின்றது. மேலும், இவர்களுக்கான மருத்துவ செலவுகளில் இன்ஷூரன்ஸ் தொகை போக மீதி செலவில் 90 சதவிகிதம் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் இவர்களின் திருமணம் நீடித்தால் இத்தகைய சலுகைகளை கலப்புத் திருமண தம்பதியர் பெறுகின்றனர்.
இவர்களின் பிள்ளைகளுக்கு உயர்நிலைப் பள்ளி கல்விச் செலவுத் தொகை மாவட்ட அளவில் நீக்கப்பட்டு மேற்படிப்பில் பல்கலைக்கழக அளவில் சேருவோருக்கு 5,000 யுவான் உதவித்தொகை ஆண்டுதோறும் அளிக்கப்படும்.
ஆனால் நம்பிக்கையின்மை கொண்ட பலர் இத்திட்டங்களை விமர்சித்து வருவதால் இந்தக் கொள்கையை வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்யாமல் தொடர்ந்து நடத்தவிருப்பதாக மாகாண அரசு அலுவலக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment