Friday, April 3, 2020

எனது வாப்பாவுக்கு கொரோனா அறிகுறி இருக்கவில்லை, தொற்று உறுதியாகி 5 மணித்தியாலத்தின் பின் வபாத்

- அன்ஸிர் -

கொழும்பு வைத்தியசாலையில் ஏப்ரல் முதலாம் திகதி மரணமடைந்த, ஜுனூஸ் அவர்களுக்கு கொரோன தொற்று இருப்பதை தாம் இறுதிவரை அறிந்திருக்கவில்லை என,  அவரது மகன் பயாஸ் தெரிவித்தார்

தற்போது மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயாஸ் இதுபற்றி மேலும் கூறியதாவது,

எனது வாப்பாவுக்கு சிறுநீரக நோய் இருந்தது. சளித் தொல்லையும் இருந்தது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மருந்தும் எடுத்திருந்தார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, வீடும் திரும்பியிருந்தார். பூரண சுகதேகியாகவும் காணப்பட்டார்.

எனினும் கோரோனா தொற்றுக்கான, எந்தவித அறிகுறிகளும் அவரிடம் காணப்படவில்லை. பின்னர் நடந்த பரிசோதனையிலேயே அவருக்கு பொசிட்டிவ் என்ற விடை கிடைத்தது.

கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 5 மணித்தியாலங்களில் எனது வாப்பா மரணித்துவிட்டார். அவருக்காக நாங்கள் ஜனாஸா தொழுகை நடத்தினோம். அவருக்கு மேலான சுவனம் கிடைக்க வேண்டுமென துஆ செய்கிறோம். 

எனது வாப்பாவின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய வேண்டுமென, பல தரப்பினரும் இறுதிவரை முயற்சித்தனர்.  எனினும் அது கைகூடவில்லை. 

எனது வாப்பாவை நல்லடக்கம் செய்வதற்காக முயற்சிசெய்த சகலருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் தொடர்ந்தும் எனது தந்தையை இணைத்துக் கொள்ளுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மர்ஹும் ஜுனூஸுக்கு ஜனாஸா தொழுவிக்கப்படும் மேலே உள்ள புகைப்படம் அவருடைய குடும்பத்தினரின் அனுமதியுடனே ஜப்னா முஸ்லிம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment