கோரானாவால் மரணித்த ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கோரிக்கையை பிரதமரும் அரசும் முற்றாக நிராகரித்துள்ளமை மூலம் சமூகம் சில படிப்பினைகளை பெற வேண்டும்.
முஸ்லிம்களின் குரலுக்கான வெற்றிடம் இருப்பதை காட்டியே முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாகி பெரும்பாலான முஸ்லிம்கள் அக்கட்சிக்கு வாக்களித்து அதனை பலப்படுத்தினர்.
தலைவர் அஷ்ரப் காலத்தில் அக்கட்சி முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத்தராத போதும் சமூகத்தின் பல தேவைகளை பெற்றுக்கொடுத்தது என்பது உண்மை. அவரது மறைவுக்குப்பின் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சிலரின் தேவைக்காக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை விற்கும் கட்சி என்பது அறியப்பட்ட விடயம்.
தற்போதைய ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. ஜனநாயகத்தை பொறுத்த வரை எதிர்க்கட்சி ஒன்று சொல்லும் விடயத்துக்கு அரசு காது கொடுத்து கேட்குமே தவிர அதனை செயற்படுத்த வேண்டும் என்ற கடப்பாடு அரசுக்கு இல்லை.
இம்றைய பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போதும், திடீரென பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டாலும் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சி எதுவும் அரசில் இல்லை என்பதை நாம் புரிய வேண்டும்.
1989ம் ஆண்டு முதல் 94 வரை அஷ்ரப் எதிர்க்கட்சியாக செயற்பட்டும் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாது என கண்டமையால்த்தான் அரச ஆதரவு கட்சியாக மாறினார். அவருடைய 6 வருட ஆட்சியில் அங்கும் இங்கும் தாவுகின்ற ஒருவராக இருக்கவில்லை என்பது மாற்று சமூகத்திடமும் இருக்கும் மரியாதையாகும்.
ஆனால் ஹக்கீம் தலைமையிலான கட்சி என்பது தேர்தலில் ஒரு கட்சியை ஆதரிப்பது தேர்தலில் தன் தரப்பு தோற்றதும் வென்ற தரப்பில் போய் ஒட்டிக்கொள்வது என்ற கொள்கை கொண்டதாகும். இந்த காரணத்தால் முஸ்லிம் காங்கிரசுக்கு இன்றைய ஆட்சியாளரிடம் நாய்க்கு இருக்கும் மதிப்பு கூட இல்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையை ஏற்று முஸ்லிம் சமூகத்துக்கு உதவினாலும் அக்கட்சி அதனை பயன் படுத்தி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று அவற்றை எதிர்க்கட்சிக்கு கொடுக்குமே தவிர இதற்காக முஸ்லிம் சமூகம் பிரதமரையும் அரசையும் பாராட்டி அரச சார்புக்கு முஸ்லிம்களின் ஓட்டுக்கள் கிடைக்க வழி செய்ய மாட்டது என்பதை அரசு புரியாமல் இருக்குமா?
இந்த அரசியல் யதார்த்தத்தை புரியாமல் சமூகம் வீணே புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஆக குறைந்தது முஸ்லிம் ஜனாஸா சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசில் உள்ள சிறிய சிங்கள கட்சிகளான வாசுதேவ, திஸ்ஸ விதாரண போன்றவர்களை அணுகி அவர்கள் மூலம் இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு போயிருந்தால் ஓரளவு சாதகம் கிடைத்திருக்கலாம்.
எது எப்படியும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு செல்வாக்கற்ற கட்சியாக ஆகிவிட்டது என்பதே உண்மை. இனியும் அக்கட்சியினருக்கு முஸ்லிம்கள் ஓட்டு போடுவது என்பது சமூகம் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடுவதாகும்.
ஒரு சமூகம் தன்னை தானே திருத்திக்கொள்ள முயலாத வரை இறைவனும் அச்சமூகத்தை திருத்த மாட்டான்.
- முபாறக் மௌலவி கபூரி, மதனி
3.4.2020

No comments:
Post a Comment