Saturday, December 26, 2020

20 க்கு ஆதரவாக வாக்களிக்க நான் அனுமதிக்கவில்லை, சமூகம் வேதனையுற்றுள்ளது - 3 Mp க்களிடம் விளக்கம் கேட்க தீர்மானம் - றிசாத்


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு, ஆதரவளிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எந்த, ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தான் அனுமதியளிக்கவில்லை என, அக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று, வெள்ளிக்கிழமை, 25 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ரஹ்மான், அலி சப்ரி, முசாரப் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

தற்போதைய நிகழ்கால அரசியல் விவகாரங்கள், ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் சமூகத்தின் கொந்தளிப்பு,  தமது கட்சியின் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதவளித்தமை,  உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக தமது கட்சியின் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்குஆதரவளித்தமை தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் தமது வேதனையை வெளிப்படுத்தினர்.

இதன்போது கருத்துரைத்துள்ள கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன், தாம் எவ்வேளையிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு கட்சியின் 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எத்தகைய உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை எனவும், அவர்கள் தமது சுயவிருப்பில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டு சமூகத்திற்கும், கட்சிக்கும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் முஸ்லிம் சமூகம் கவலையுற்றிருப்பதாகவும், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இசாக் ரஹ்மான், அலி சப்ரி, முசாரப் ஆகிய 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் தாம், ஏன் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தோம் என்ற விபரத்தை எழுத்துமூலம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் எனவும் Jaffna Muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

No comments:

Post a Comment