Saturday, December 26, 2020

முஸ்லிம்கள் ஆவேசப்பட்டு எதையும் சாதிக்க முடியாது, நல்ல முடிவுகள் வர பிரார்த்தனை செய்வோம்..!!


- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

கொவிட் 19 ஜனாஸா விடயத்தில்  அரசாங்கத்தினதும் ,அதிகாரிகளினதும்  நிலைப்பாட்டில் உடன்பாடு காண முடியாத நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் உள்ளனர். இதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அரசின் நிலைப்பாடு கொஞ்சம் தளர்வு அடைந்தாலும்  அதிகாரிகளின் நிலைப்பாடு விடாப்பிடியாக உள்ளது. இதில் இனவாதமும் இரண்டறக் கலந்து செயற்படுகின்றது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இவ் விடயத்தில் அரச சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயும், அரச ஆதரவாளர்களுக்கு  இடையிலும் கூட  கருத்து முரண்பாடு நிலவுகின்றது. 

தற்காலிக ஏற்பாடாக குளிரூட்டியில் ஜனாஸாக்களை வைக்கும்படியான கட்டளையை மீறி சில பகுதிகளில் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றன. ஜனாஸா  விடயம் இன்று உச்ச கட்டத்தை அடைந்து அது சிங்கள -முஸ்லிம் இனங்களுக்கிடையே ஒரு கடுமையான முரண்பாடான நிலையை தோற்றுவித்து விடுமோ என்ற பயமும் மேலோங்குகிறது. அது மட்டும் அல்லாமல் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரப் போக்கை நோக்கி செல்வார்களோ என்ற பீதியும் உருவாகின்றது.

பௌத்த மக்களில் சிலர் இறந்த உடல்களை அடக்கம் செய்வதை விட எரிப்பதை மேலாக கருதுகின்றனர்.ஏனையோர் இறந்த பிறகு எரித்தால் என்ன? புதைத்தால் என்ன? எல்லாம் ஒன்று என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.முன்னர் இருந்த மயானங்கள் பல அருகிப் போய் இன்று அதிகமான மக்கள் எரிப்பதையே விரும்புகின்றனர்.அது மட்டுமல்லாமல் அஸ்தியை பூச்சாடிகளுக்குள் வைப்பவர்களும் உள்ளனர். எனவே ஜனாஸா எரிப்பு விடயம்  சிங்கள-பௌத்த மக்களுக்கு   ஒரு பாரதூரமான விடயம் அல்ல. முஸ்லீம் சமூகத்தின் மத உணர்வை  சரியாகப் புரிந்து கொள்ளாத காரணங்களில் அதுவும் ஒன்று.

அதைப்போல் அரசாங்கமும் முஸ்லீம் மக்களின் விடயங்களில் பெரிதாக கரிசனை காட்டுவதாக தெரியவில்லை. அரசுக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறுவதைவிட சிங்கள பௌத்த மக்களின் எதிர்ப்பு வராமல் பாதுகாப்பது ஒரு முக்கிய விடயமாக உள்ளது.அதே வேளை 20ம் திருத்தத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னென்ன  நிபந்தனைகளின் கீழ் ஆதரவளித்தார்கள்? அவை நிறைவேற்றப்பட்டனவா என்பது அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் மட்டுமே தெரியும்.ஆனால் தலைவர் ரிஷார்ட் பதியுதீன் அவர்களுக்கு  பிணை விரைவாக வழங்கப்பட்டது.

  இறுதி முடிவு ஒன்றை தருவதில் உள்ள தாமதம் சிங்கள மக்களின் எதிர்ப்பை பெற அரசு தயாரில்லை என்பதுவும் ஒன்றாகலாம்  என்று ஊகிக்கலாம். நாட்டின் தலைமை பக்க சார்பாக  நடக்க முடியாது என்ற விவாதம் முன்வைக்கப் பட்டாலும் தன்னை பதவியில் அமர்த்த காரணமாக இருந்த வாக்காளர்களின் எதிர்ப்பை சமாளிப்பது முக்கியமான விடயம். அன்மையில் எதிர்க் கட்சியால் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் அவர்கள் இன்றைய  ஜனாதிபதி சிங்கள பௌத்த வாக்குகளால் வென்றவர் என்று பகிரங்கமாக கூறினார். அது அவரின் அரசியல் முதிர்ச்சி இன்மைக்கு ஒரு சான்று ஆகும். குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட ஒரு கூற்று மட்டுமில்லாமல் அந்தப் போராட்டத்தின் அரசியல் நோக்கத்தையும் வெளிக் காட்டியது.

ஆகவே இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களாகிய நாம் ஆவேசப்பட்டு செயல் படுவதில் எதையும் சாதிக்க முடியாது. ராஜதந்திர வழிமுறைகளையே கையாள வேண்டும். அரசியல் நோக்கை விட்டு விட்டு சமூக நோக்கை அடிப்படையாக வைத்து ஒன்று பட வேண்டும். நல்ல தீர்வொன்றைப் பெறுவதற்கு முன்வரும் தலைமைகளுக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும். அல்லாஹ் மிகப் பெரியவன். நாம் விரும்பியோ விரும்பாமலோ அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை நாட்டில் ஆட்சியாளர்களாக இருக்கப் போவது இன்றைய ஆட்சியாளர்கள் தான். பலமான ஒரு அரசாங்கமாகவும் அவர்கள் உள்ளனர். தேவையற்ற ,எந்த ஒரு விடையையும் காண முடியாத  போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் கொஞ்சம் நிறுத்தி விட்டு இணக்கப்பாட்டுடன் தீர்வு ஒன்றைக் காண முயலுவோம். ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் தான் இன்றைய தேவை. நட்புக் கரங்களின் மூலம் மட்டுமே விரைவான தீர்வு கிடைக்கும். விரைவில் நல்ல முடிவைப் பெறும் முன்னெடுப்புகள் உயர் மட்டத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. அவற்றின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்வோம்.

No comments:

Post a Comment