-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
இந்தியா - தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்திலிருந்து மீளுவதற்கு இலங்கை முஸ்லிம்களும் உதவ முன்வர வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் அல்தாபி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு (06-12-2015) தொலைபேசி மூலமாக வழங்கிய தகவல்கள் வருமாறு,
சென்னை வரலாற்றில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய நெருக்கடியை கையாள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளது. வெள்ளம் சிலநாட்களில் வழிந்தோடிவிடும் என்ற நம்பிக்கையில்தான் தவ்ஹீத் ஜமாத் களத்தில் குதித்தது. எனினும் நிலைமை அவ்வாறு அல்ல. சென்னையும் அதனையண்டிய பகுதிகளும் வழமைக்கு திரும்ப இன்னும் 2 அல்லது 3 வாரங்கள் பிடிக்கும்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உலருணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கவும், அவர்களை சாக்கடையிலிருந்து மீட்கவும் வேண்டியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதியும் உதவிப் பணிகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதிதாக 5 ஆயிரம் ஊழியர்களை களத்தில் இறக்கியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் உள்ள முஸ்லிம் உறவுகள், வெளிநாடுகளில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் தம்மால் எத்தகைய உதவிகளை சென்னையில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவ முடியுமோ அந்த உதவிகளைச் செய்ய முன்வருமாறு தவ்ஹீத் ஜமாத் பகிரங்க அழைப்பு விடுக்கிறது.
இயற்கை அனர்த்தங்கள் ஆசிர்வாதங்கள் என்பார்கள். ஆம், சென்னையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தமானது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அவதூறு பரப்பித்திரிந்தவர்களுக்கு பெரும் மரண அடியாக அமைந்துள்ளது. முஸ்லிம்களிடத்தில் குடிகொண்டுள்ள மனித நேயத்தை மாற்றுமத சகோதரர்கள் கண்டுகொண்டுள்ளனர். மக்களுக்கு மனிதாபிமான நோக்கத்துடன் பணியாற்ற நாம் வெள்ளத்தில் கால்களை வைத்தபோது மாற்றுமத சகோதரர்கள் இதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டனர்.
இஸ்லாத்தை விமர்சித்து, முஸ்லிம்களை வம்புக்கு அழைத்த இந்துத்துவ சக்திகளிடம் தற்போது மாற்றுமத சகோதரர்கள் கேள்வி கேட்பதை அவதானிக்கமுடிகிறது. முஸ்லிம் சகோதரர்கள் எந்தவித சுயநல காரணமின்றி அவர்கள் உதவுகிறார்கள் என்றால் அவர்களுக்கு பின் ஏதோ ஒரு ரோல்மடல் இருக்கிறது என மாற்றுமத சகோதரர்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
நல்லிணக்கத்தை பெரிதும் விரும்புபவர்கள் இந்த முஸ்லிம்களே. அந்தவகையில் தமது இறையில்லங்களை மாற்றுமத சகோதரர்கள் அடைக்கலம் தேடும் பூமியாக மாற்றியமைத்து, தமது மத சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தியுள்ள முஸ்லிம்களின் செயற்பாடுகள் பல உண்மைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லியுள்ளது.
முஸ்லிம்களின் மனதில் இயற்கையாகவே உள்ள மனிதாபிமானம் தற்போது மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது எனவும் அல்தாபி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய அந்த நேர்காணலின் போது மேலும் கூறினார்.
No comments:
Post a Comment