-கலாநிதி எம்.எஸ். அனீஸ்,
கொழும்புப் பல்கலைக்கழகம்-
அண்மையில் சென்னையை தாக்கிய பெரும் வெள்ள அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புப்பணி, நிவாரணப்பணி மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளில் அரச நிறுவனங்களுக்கு சரிநிகராக, சிலவேளை அதையும் விஞ்சிய நிலையில் களப்பணியாற்றி ஒட்டுமொத்த உலக முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ள தமிழ்நாடு இஸ்லாமிய சகோதரர்களுக்கு எமது பாராட்டுக்கள் என்றென்றும் உரித்தாகட்டும். உளத்தூய்மையுடன் நீங்கள் செய்துவரும் இந்த மனிதாபிமான பணிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு ஈருலக வெற்றியையும் தந்தருள பிரார்த்திக்கின்றோம்.
முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், மதவாதிகள், குண்டு வைப்பவர்கள், விமானங்களை கடத்துபவர்கள், அப்பாவி பொதுமக்களை, பெண்களை, குழந்தைகளை கொலைசெய்பவர்கள், சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காதவர்கள், மனித உரிமைகளை பின்பற்றதாவர்கள், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பவர்கள் மொத்தத்தில் உலக அமைதிக்கும் சமாதானத்திற்கும் அச்சுறுத்தலானவர்கள் என்று மேற்கத்தைய ஆட்சியாளர்களும் அவர்களது ஊதுகுழல்களான ஊடகங்களும் ஒரு மாயயை தோற்றுவித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், உண்மையான இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? அவர்களது பண்பாடு யாது? ஏனைய சமூகங்கள் தொடர்பாக அவர்களது அணுகுமுறைகள் எப்படி இருக்கவேண்டும்? மனிதாபிமானம் என்பது யாது என்பவற்றை முழு உலகிற்கும் இன்று தெளிவுபடுத்தியுள்ள தமிழ்நாடு இஸ்லாமிய சகோதர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. முஸ்லிம்கள் என்றாலே இனவாதிகள், மதவாதிகள், ஈவிரக்கமற்றவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள், காட்டுமிராண்டிகள் என்றெல்லாம் கூச்சலிடுபவர்களுக்கு இன்று நீங்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளீர்கள். அவர்களது முகங்களிலே கரியினை பூசி அவர்களை அசிங்கப்படுத்தியுள்ளீர்கள். இஸ்லாமிய விரோதிகள் இன்று வாயடைத்துப் போய்நிற்குமளவிற்கு உங்கள் பணிகள் அமைந்துள்ளன. குறிப்பாக முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியான குற்றங்களை சுமத்தி அப்பாவி முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துவரும் இந்துத்துவ பயங்கரவாதிகள் வாழும் இந்திய நாட்டிலே இதனை நீங்கள் செய்திருப்பதானது ஒட்டுமொத்த உலக முஸ்லிம் சமூகத்திற்கும் செய்திருக்கும் அளப்பரிய பணியாகும்.
அல்லாஹ்வினதும் அவனது இறுதித் தூதரினதும் அன்பையும் அருளையும் மாத்திரம் எதிர்பார்த்து நீங்கள் செய்துள்ள இந்தத் தியாகங்கள் முழு உலக முஸ்லிம்களுக்கும் பெருமை பெற்றுத்தந்துள்ளது. உங்களது இந்தப்பணி என்றென்றும் தொடர எல்லாம்வல்ல அல்லாஹ்வை நாம் என்றென்றும் பிரார்த்திப்போம்.
இந்த இயற்கை அனர்த்தத்தின் போது 30,000 க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களுடன் (ஆண்கள் மற்றும் பெண்கள்) உயிரைப் பணயம் வைத்து நீங்கள் செய்துள்ள சேவைகளைப் பாராட்டி மாற்றுமத சகோதர சகோதரிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள பாராட்டுக்களையும், ஏனைய செய்திகளையும் பார்க்கும்போது ஒருபுறம் எமது உடல் புல்லரித்து கண்கள் கலங்குகின்ற அதேவேளை அந்த தியாகங்களின் பங்களிகளாக எம்மால் இருக்க முடியவில்லையே என ஒருவிதத்தில் பொறாமையாகவும் உள்ளது. மாற்று மத அரச தலைவர்கள் மட்டுமின்றி மதத்தலைவர்கள் கூட மனம் விட்டு பாராட்டும் அளவிற்கும் முஸ்லிம்களின் பரம விரோதிகளாக இருந்தவர்கள் உளப்பூர்வமாக உங்களுக்கு நன்றி சொல்கின்ற அளவிற்கும் உங்கள் தன்னலமற்ற தியாகங்களும் சேவைகளும் அமைந்துள்ளமை பாராட்டுகளுக்கும் அப்பால்பட்ட ஒன்றுதான் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
ஜாதியும், மதமும், தீண்டாமையும் தலைவிரித்தாடி மக்களை பிரித்து ஆளுகின்ற ஒரு மண்ணிலே இஸ்லாமும் அது போதிக்கின்ற உயரிய மனிதாபிமானமும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை உலகிற்கு நன்றாகவே உணர்த்தியுள்ளீர்கள். பொதுவாகவே முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இப்படித்தான் அவர்கள் வாழ்வார்கள் வாழ்ந்துகொண்டும் இருக்கின்றார்கள். ஆனால் அவையாவும் பாரிய அளவில் வெளியுலகிற்கு தெரியப்படுத்தப்படுவதில்லை. உண்மையில் இஸ்லாம் அதை வரவேற்கவும் இல்லை.
ஆனால் இன்று நாம் செய்யும் சிறிய பணியாக இருந்தாலும் அதனை ஏனைய சமூகங்களுக்கு புரிய வைக்கவேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை எமக்கு உலகளாவிய ரீதியில் உருவாகியுள்ளது. எம்மையும் எமது உயரிய மார்க்கத்தினையும் கேவலப்படுத்தும் மக்கள் மத்தியில் எமது இவ்வாறான செயல்கள் சென்றடைய வேண்டும். இஸ்லாத்தைப் பற்றிய அவர்களது தப்பபிப்பிராயங்கள் களையப்படல் வேண்டும். ஆகவே இதனை குறைகூறுபவர்கள் தயவு செய்து உங்கள் குறைகளை இத்துடன் நிறுத்தி உங்களுக்கும் எமக்கும் நாம் பின்பற்றும் உயரிய மார்க்கத்திற்கும் நற்பெயர் பெற்றுத்தந்துள்ள அவர்களது தியாங்கங்களை கொச்சைப்படுத்துவதில் இருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள். அநாகரீகமான விமர்சனங்களை பதிவேற்றம் செய்யுமுன்னர் நாம் இதுவிடயத்தில் என்ன செய்துள்ளோம் என்பதனையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.
தமிழ் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்கான அழைப்பொன்று எமது நாட்டிலும் விடுக்கப்பட்டிருப்பதனை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது. ஆனால் எப்பேற்பட்ட உதவிகள் (பணம், பொருட்கள்)? எப்படி? யாரிடம்? எங்கே? செய்யப்படல் வேண்டும் என்பது தொடர்பான விபரங்கள் கொடுக்கப்படவில்லை. அதனை உரிய முறையில் தெரிவித்தால், உதவி செய்ய முற்படுபவர்களுக்கு வசதியாக அமையும் என்பதோடு இலங்கை முஸ்லிம்கள் சார்பாக எம்முடைய பங்களிப்பினையும் பாதிக்கப்பட்ட எம் தமிழ் நாட்டு உறவுகளுக்கு விரிவுபடுத்துவதற்கு இலகுவாக அமையும் என நான் கருதுகின்றேன்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில், மார்க்க ரீதியாகவும் அதனை பின்பற்றும் முறைகள் தொடர்பாகவும் எமது மக்கள் மத்தியில் சிறு சிறு (சிலவேளை பாரிய) கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை ஒருபோதும் எம்மிடையே நிரந்தரமான பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த நாம் அனுமதிக்க முடியாது. எமது பொது எதிரிகளை இஸ்லாம் எமக்கு போதித்துள்ள நல்ல பண்புகளாலும் வழிகாட்டல்களாலும் சரியாக வழிநடத்தும் பொறுப்பு நம் அனைவரிடமும் உண்டு. அதனை யார் எந்த வடிவத்தில் எங்கு செய்தாலும் நாம் பாராட்டி அவர்களுக்காக பிரார்த்திக்கும் ஒரு மனப்பக்குவத்தை யாவரும் வளர்ப்போமாக. மேலும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி தாம் ஆதரிக்காத ஏதாவது ஒரு (இஸ்லாமிய) இயக்கத்தினையும் அதுசார்ந்த உறுப்பினர்களையும் பகிரங்கமாக விமர்சிக்கும் பண்பினை நாம் நிறுத்த வேண்டும். மாற்று மதத்தினரும், வேற்று இனத்தவர்களும் பார்க்கும் சமூக வலைத்தளங்களில் எமது முரண்பாடுகளை பகிரங்கப்படுத்தி எமது முகத்திலே நாமே காறி உமிழ்ந்து கொள்கின்ற பணியினை நிறுத்திக்கொள்வதுதான் ஒரு உண்மையான இஸ்லாமியனின் பண்பாக இருக்க முடியும் என்பதோடு அதுவே யாவருக்கும் நன்மை பயவிக்கும் என்பதும் எனது தாழ்மையான கருத்தாகும்.
No comments:
Post a Comment