ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள யோசனை குறித்து உறுப்பு நாடுகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்கின்றது.
இதற்கமைய உறுப்பு நாடுகளின் தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த கூட்டத் தொடர்களில் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்ட நட்பு நாடுகளிடமிருந்து இதற்கு சாதகமான பதிலளிப்புக்கள் கிடைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
கடந்த ஜெனிவா கூட்டத்தொடரின்போது, நல்லாட்சி அரசாங்கத்தினால் இணங்கப்பட்டு, இணை அனுசரணை வழங்கப்பட்ட 30 இன் கீழ் 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
அது மாத்திரமின்றி, மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக உள்ளகப் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை அறிவித்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அண்மையில் அதற்கான ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தது.
அந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும், காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்ந்த பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையையும் இந்த ஆணைக்குழு விரிவாக ஆராய உள்ளது.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும், ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவை இராஜதந்திர ரீதியில் தெளிவுபடுத்தி உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் போன்ற சட்டங்கள், இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment