அஷ்ஷைக் பளீல் (நளீமி)
தற்போது மர்ஹுமா டாக்டர் பாஹிமா அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. டாக்டர் ஷாபி அவர்களை பற்றி இன்னும் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்விருவர் பற்றிய எமது சில மனப்பதிவுகளை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமாகயிருக்கும்.
டாக்டர் ஷாபி
தியாகத்துடன் பணிபுரிந்த டாக்டர் ஷாஃபிக்கு எதிரான பயங்கரமான இனவாத விமர்சனங்கள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டுவிட்டன.
அவர் குருநாகல் வைத்தியசாலையில் கடமை புரிந்த சந்தர்ப்பத்தில் அதனை தொழில் என்பதற்கும் அப்பால் சென்று எவ்வளவோ தியாகங்களுடன் (ஆங்கிலத்தில் கூறப்படுவது போல் Out of way சென்று) பணிபுரிந்திருக்கிறார் என்பதை அவரது சேவையைப் பெற்றவர்களே கூறியிருக்கிறார்கள்.
அதற்கும் அப்பால் அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட காலத்திற்கு இழப்பீடாகக் கிடைத்த 2.7 மில்லியன் ரூபாய்களை மருத்துவத் துறைக்கே அவர் ஸதகாவாக கொடுத்துள்ளார்.
மீண்டும் சேவையைத் தொடர அனுமதி வழங்கப்பட்டவுடன் அதே வைத்தியசாலையில் இணைந்து கொண்டார். தற்போது நிலை சுமூகமாக இருப்பதாக அறிய முடிகிறது. அவர் தைரியமாக தனது பணியை தொடர்வதாகவே அறிய முடிகிறது. அவரது கடந்த கால சேவையில் குளறுபடி இருக்கவில்லை என்பதனால் தான் அவரால் எப்படி அங்கே தைரியமாக மீண்டும் நுழைய முடிந்திருக்கிறது.
அவரைப் போட்டு சீரழித்தவர்களுக்கு சிறந்த பாடத்தை அல்லாஹ் புகட்டி விட்டான்.
மர்ஹூமா டாக்டர் பாஹிமா
அந்த வரிசையில் தற்போது மர்ஹூமா டாக்டர் பாஹிமா பற்றி மிகவும் சிறப்பாக பிற சமயத்தவர்கள் கூட பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வைத்தியசாலையில் ஏற்கனவே கடும் சுகவீனத்தால் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு ஒரு மழலையின் உயிரைப் பாதுகாப்பதற்காக தனது சுகவீனத்தையும் பொருட்படுத்தாமல் டாக்டர் பாஹிமா தனது வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு வந்து மழலைக்கு உச்சகட்டமாக சிகிச்சை செய்திருக்கிறார். அதன் போது ஏற்பட்ட உடல் பலவீனத்தால் அவரது இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அல்லாஹ்வின் நாட்டப்படி வபாத்தாகிவிட்டார். அல்லாஹ் அவருக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக!
"யார் ஓர் ஆத்மாவை உயிர்தப்ப வைக்கிறாரோ அவர் முழு மனித சமுதாயத்தையும் உயிர்தப்ப வைத்தவர் போன்றவராவார்"(அல்குர்ஆன்)
டாக்டர் பாஹிமா ஓர் உயிரை காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்து முழு மனித சமுதாயத்துக்கும் உயிர் கொடுத்தவர் என்ற மிகப் பெரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டார் என்று ஆழமாக நம்புகிறோம். உள்ளங்களை அல்லாஹ் மாத்திரமே அறிந்தவன்.
இத்தகைய பாக்கியம் மனிதர்களுக்கு அரிதாகவே கிடைக்கும். அது முஸ்லிம் பெற்றோரின் மழலையாக இல்லாதிருந்தும் வைத்திய சேவையானது மத எல்லைகளுக்கு அப்பாலான அல்லாஹ் தந்த அமானிதம் என்று அவர் கருதியிருக்கிறார்.
யதார்த்தமான வைத்தியர்கள்
வைத்தியத் துறையின் இவ்விரு ஆளுமைகளது உயர் மனப்பாங்குகளது வெளிச்சத்தில் வைத்தியத் துறையில் சம்பந்தப்படும் ஒவ்வொருவரும் எத்தகைய மனப்பாங்குகளோடு அதில் ஈடுபட வேண்டும் என்பதை நோக்க முடியும்.
ஒவ்வொரு வைத்தியரும் பின்வருமாறு சிந்திக்க வேண்டும்:-
1. பல லட்சம் மாணவர்களுக்கு மத்தியில் இருந்து அல்லாஹ் என்னை மருத்துவத் துறைக்கு தெரிவுசெய்திருக்கிறான்.அது உச்ச கட்ட திறமைசாலிகளுக்கு மட்டுமே அல்லாஹ்வால் வழங்கப்படும் சந்தர்ப்பமாகும். அது எனக்கு வழங்கப்பட்டிருப்பது நான் அதனை மனித சமூகத்தின் நலன்களுக்காக பயன்படுத்துகிறேனா என்பதை பரிசோதிப்பதற்கன்றி அதனை வைத்து மக்களை ஒட்டுண்ணி போன்று உறிஞ்சுவதற்கல்ல. மக்கள் நோய்களுக்கு உள்ளாகிவிடாதிருக்க தற்காப்பு ஏற்பாடுகளை மக்களுக்கு சொல்லிக் கொடுப்பதுடன் அவர்கள் நோயாளிகளாகிவிட்டால் முழுமனதுடன், முழு திறமைகளையும் பயன்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே எனது குறிக்கோளாகும் என்ற புனிதமான குறிக்கோள் அவசியம்.
2. அரசு எனக்கு பல மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவழித்து மருத்துவ கல்வியை தந்திருக்கிறது. உலக மாந்தர்களுக்கு நான் சிறப்பாக மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாகும். அரசின் பணம் என்றால் அது மக்களது பணம். எனவே அரசினதும் பொதுமக்களதும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் நடந்து கொள்ள வேண்டும்.
3. வைத்தியர் தனது சேவையை ஓர் இபாதத்தாக- ஓர் அமானிதமாக, அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து உளத்தூய்மையுடன் மத இன எல்லைகளுக்கு அப்பால் மனிதாபிமானத்தோடு செய்தாக வேண்டும். அப்போது தான் அல்லாஹ்விடமிருந்து உயர்ந்த கூலியை பெறமுடியும்.
அந்த வகையில் டாக்டர் ஷாஃபி டாக்டர் பாஹிமா ஆகிய இருவரையும் ஏனைய வைத்தியர்களையும் இத்தகையவர்களது கூட்டத்தில் வல்லவன் அல்லாஹ் சேர்ப்பானாக!
எல்லா வைத்தியர்களும் இப்படியான உயர்ந்த மனநிலையில் அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
சுயநலமிக்க வைத்தியர்கள்
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில வைத்தியர்களது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
சிலர் மருத்துவக் கல்லூரிக்கான தமது பிரவேசத்தை கொழுத்த சீதனத்துடன் கூடிய திருமணத்திற்கான பாலமாக பயன்படுத்துகிறார்கள். சில பெற்றார் நமது பிள்ளைகளை இதற்காக வேண்டியே கஷ்டப்பட்டு மருத்துவத் துறையில் சம்மந்தப்படுத்துகிறார்கள்.
மருத்துவ பட்டம் பெற்ற சிலர் பணமும் பேரும் புகழும் லாபங்களும் தான் தமது தெய்வங்கள் என்ற நிலைக்குப் போய் நோயாளிகளது சாபத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
இது மிகப்பெரும் துரதிஷ்டமாகும். அல்லாஹ் தமக்கு வழங்கிய மருத்துவ அறிவையும் பட்டத்தையும் சுவர்க்கத்தை நோக்கி போவதற்கான பாதையாக பயன்படுத்த முடியுமாக இருக்க அவர்கள் தம்மை இந்த இழி நிலைக்கு தள்ளியிருப்பது எமக்கு ஆச்சரியத்தையும் கவலையையும் தருகிறது.
மருத்துவ அறிவு மட்டுமன்றி தொழில்நுட்பம், பொறியியல், சட்டம், அரசியல் போன்ற ஏனைய துறைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை அல்லாஹ் தமக்குத் தந்த அமானிதங்களாக, சோதனைகளாகக் கருதி அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல வேண்டுமே என்ற உணர்வுடன் நோயாளிகள் மீது அன்புடன் அக்கரையுடன் செயல்படுவது அவசியமாகும்.
இத்தகைய நல்ல உணர்வுகளோடு செயல்படும் அனைத்து வைத்தியர்களுக்கும் மேலான கூலியை அல்லாஹ் வழங்குவானாக!
No comments:
Post a Comment