Saturday, September 30, 2023

இலங்கையர்கள் விரக்தியடைந்துள்ளனர் - IMF தெரிவிப்பு


வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால், நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான சமூக அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள ' 2023 - செப்டம்பர் - பொது நிர்வாக பகுப்பாய்வு மதிப்பீட்டு அறிக்கை'யில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணவீக்கத்தை மட்டுப்படுத்துதல், நாணய மாற்று விகிதங்களை ஸ்திரப்படுத்துதல், இலங்கை மத்திய வங்கியின் இருப்புகளை மீள கட்டியெழுப்புதல் ஆகியவற்றுடன் பொருளாதார ஸ்திரப்படுத்தலில் தற்காலிக முன்னேற்றங்கள் இருந்த போதிலும், இந்த நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எரிசக்தித்துறையில் வரித் திருத்தங்கள், செலவை ஈடு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட விலை நிர்ணயம், நிலுவைத் தொகை நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்பன வாழ்க்கைச் செலவை உயர்த்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்தியாவசியப்பொருட்களின் தொடர்ச்சியான தட்டுப்பாடு, போராட்டக்காரர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமை என்பன பொதுமக்களின் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊழலைக் குறைப்பதில் தெளிவான முன்னேற்றம் இல்லாமையும் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட முக்கிய காரணியென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


கடந்த கால முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் அதற்குரிய தண்டனையை அனுபவிக்காமல், தத்தமது பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கின்றமையும் பொதுமக்கள் கவனம் செலுத்தியுள்ள விடயமாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.


இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட பலவீனமான பொறுப்புக்கூறல் நிறுவனங்களால் ஊழல் அபாயங்கள் உக்கிரமடைந்துள்ளதாகவும் இதனால் இந்த நிறுவனங்களுக்கு தங்களது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் அதிகாரமோ, தகுதியோ இல்லை எனவும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தவறான நடத்தையைக் கொண்ட அதிகாரிகளை தண்டிக்காததால், பொது நிர்வாகத்துறை மீதான நம்பிக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், அரச கொள்முதல் நடவடிக்கைகளில் ஊழல் இடம்பெறும் அபாயம் காணப்படுகின்றமை, கொள்முதல் செயற்பாடுகளுக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதில் அதிக அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமை என்பன பொதுமக்களின் விரக்திக்கான காரணங்களாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் புதிய அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment