Tuesday, January 19, 2021

39 ஆவது அகவையில், மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்


ஒலி வழியே மொழியும், மொழி வழியே கல்வியும், கல்வி வழியே மேன்மையும், மேன்மையின் வழியே மேம்பாடும் மனிதன் அடைவதற்கு உயர்கல்வி அத்தியவசியமாகும். இவ்வாறான உயர்கல்வியை  வழங்கும் தலமாகவே இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கையில் ‘மொரட்டுவ பல்கலைக்கழகம்’ அமைந்துள்ளது.

இவ்வாறு அழகிய சூழலின் மத்தியில் அமைந்துள்ள மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் தோற்றமும் இன்றிலிருந்து 50 வருடங்கள் பின் நோக்கி செல்கின்றன.

மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் இளங்கலை பட்டதாரி மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றும் முகமாகவும் உரிமைகளை பாதுகாக்கும் முகமாகவும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் முகமாகவும் 1970 ஆம் ஆண்டில் “மஜ்லிஸ் -உல்- இஸ்லாம்” முஸ்லிம் மஜ்லிஸ் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1981 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்தும் வருடா வருடம் மஜ்லிஸ்-உல்- இஸ்லாம் தமது வருடாந்த பொது கூட்டம் மற்றும் இஸ்லாமிய தின விழாவை கொண்டாடி வருகின்றது.

அவ்வகையில் 39ஆவது அகவையில் காலடி வைத்துள்ள மஜ்லிஸ்-உல்- இஸ்லாத்தின் வருடாந்த பொது கூட்டம் மற்றும் இஸ்லாமிய தின விழா 2021 ஜனவரி 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெய்நிகர் பயன்முறையில் Zoom தொழிநுட்பம் மற்றும் முகநூலின் நேரடி ஒளிபரப்பின் ஊடாக சிறப்பாக நடைப்பெற்றது. 

முன்னாள் நிர்வாக உறுப்பினர்கள் மூலம் மஜ்லிஸில் இதுவரைக்காலம் பேணிய பண்புகள், மரபுகள் என்பவை புதிய நிர்வாக உறுப்பினர்களான அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் தருணமான இந்நிகழ்வு, முகம் தெரியா பல பங்களிப்பாளர்களின் முயற்சியில் பல பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் மிகவும் வெற்றிகரமாக நடைப்பெற்றது முக்கிய அம்சமாகும்.

நிகழ்வின் முதல் அங்கமாக கிராத் மற்றும் அதன் மொழிபெயர்ப்பு இடம்பெற்றது. விழாவின் ஆரம்பத்தில் மஜ்லிஸ்-உல்- இஸ்லாத்தின் தலைவர் திரு. உஸாமா ஸைட் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றதோடு ஆண்டு முழுவதும் மஜ்லிஸின் மூலம் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை எடுத்துரைத்ததோடு பெண் இளங்கலை பட்டதாரி மாணவிகளின் பங்களிப்பின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தது நிகழ்வில் முக்கிய அம்சமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து மஜ்லிஸ்-உல்- இஸ்லாத்தில் இதுவரை காலம் நிர்வாகத்தில் இருந்த தலைவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தொடர்பான சிறு காணொளி ஒளிபரப்பானது. அதனையடுத்து செயலாளரின்அறிக்கை வாசிக்கப்பட்டது. இதில் கடந்த வருட, வருடாந்த பொதுக்கூட்டம் சம்பந்தமான விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அடுத்து பொருளாளரின் அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் மஜ்லிஸினால் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை மட்ட ‘Du Coeur’ குறும்பட போட்டியில் வெற்றியீட்டிய குறும்படம் ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து  விசேட விருந்தினரான மஜ்லிஸ்-உல்- இஸ்லாத்தின் மூத்த பொருளாளரான கலாநிதி. ரிஸ்வி நூர்டீன் உரையாற்றினார். அவரின் உரையானது முஸ்லிம் சமூகம் முன்மாதிரியான ஒரு சமூகமாக வாழ வேண்டும் என்பதை வழியுறுத்துவதாக அமைந்திருந்தது. தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக விழாவில் கலந்து கொண்ட லண்டனில் குழந்தை மருத்துவ ஆலோசகராக சேவையாற்றும் வைத்தியர் ரைஸ் முஸ்தபா அவர்களின் உரை இடம்பெற்றதோடு, வைத்தியராக ஒரு இக்கட்டான சூழலில் அவர் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

தொடர்ந்து பல சுவாரஸ்யமான வினா விடை போட்டிகளும் இடம் பெற்றன. அவை அனைத்தும் பார்வையாளர்களின் மனதை கவரக்கூடியதாக இருந்தன. இதனை தொடர்ந்து பிரதம அதிதியாக விழாவிற்கு கலந்து கொண்ட மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தரான பேராசிரியர் திரு. பி.கே.எஸ். மஹானாம அவர்களின் உரை இடம்பெற்றது. முக்கியமாக இவ்வுரையில் மஜ்லிஸ்-உல்-இஸ்லாத்தின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக பெரும் மகிழ்ச்சியடைவதாக பிரதி துணை வேந்தர் கூறியது  குறிப்பிடத்தக்கதாகும்.

சிறப்புரையை தொடர்ந்து  பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் மஜ்லிஸில் தன்னார்வ தொண்டர்களாக சேவையாற்றிய மாணவ மாணவிகளுக்கும் , ஜும்மா குத்துபா நிகழ்த்திய மாணவர்களுக்கும் மற்றும் மஜ்லிஸினால் மேற்கொண்ட போட்டிகளில் கலந்து வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிளுக்கும் பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய அங்கமாக அனைவரும் காத்திருந்த மொரட்டுவ பல்கலைக்கழக மஜ்லிஸ்- உல்- இஸ்லாம் மூலம் வருடாந்தம் வெளியிடப்படும் ‘சஞ்சிகை வெளியீடு’ இடம்பெற்றது. இதனை தொடர்ந்து நிகழ்வின் அடுத்த கட்டமாக புதிய நிர்வாக உறுபினர்களின் நியமனம் இடம்பெற்றதோடு அதனை தொடர்ந்து புதிய தலைவராக நியமனம் பெற்ற எம்.எ.எம். அப்(f)ஹம் உரையாற்றினார். இதன்போது இதுவரைக்காலம் நிர்வாகத்தில் இருந்த மஜ்லிஸ் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்பு மறக்க முடியாத ஒன்றாக காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டில் நிழவும் அசாதாரண நிலைமையிலும்  ‘Du Coeur , An aura of amity, Tipping point (G.C.E A/L Guidance) Aptitude Test Guidance, Explore the Glory’ போன்ற பல செயற்பாடுகளை முன்னெடுத்து தமது கடமைகளை தவறாது மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து வினாவிடை போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதோடு நிகழ்வின் இறுதி அங்கமாக உதவி செயலாளர் திரு. நப்ரீஸ் அவர்கள் மூலம் நன்றியுரை ஆற்றப்பட்டது.  இறுதியில், ஸலவாத்துடன் இறைவனின் அருளினால்  மஜ்லிஸ்-உல்- இஸ்லாத்தின்  39வது பொதுக்கூட்டம் மற்றும் இஸ்லாமிய தின விழா இனிதே முடிவடைந்தது.

No comments:

Post a Comment