நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் இன்றைய தினம் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.
அதேபோன்று, தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், இறைமைக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த, பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த படைவீரர்களையும் நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
சுதந்திரம் பெற்ற 73 ஆண்டுகளில், ஒரு தேசமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். மத மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள், இனவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள், தேவையற்ற வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகள் போன்ற பல பிரச்சினைகளை அவ்வப்போது எதிர்கொண்டோம். தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல், எமது நாட்டில் வாழும் பல்வேறு இனத்தவர்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், வறுமையை முற்றாக ஒழித்து வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் சவால் இன்னும் எமக்கு முன் உள்ளது.
எமது நாட்டின் தேசிய மரபுரிமைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், தேசியம் மற்றும் தேசப்பற்று ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலவீனமுற்றிருந்த தேசிய பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தி தாய் நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க இந்த நாட்டின் 69 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர்.
நான் ஒரு சிங்கள பௌத்த தலைவர். அதை வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். பௌத்த போதனைகளின்படியே நான் இந்த நாட்டை நிர்வகிக்கிறேன். அனைத்து சமயங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் அஹிம்சையும் அமைதியும் கொண்ட பௌத்த தத்துவத்தில், எமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்குள் சரி சமமாக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு.
தேசியத்தை மதிக்கும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தலைமைக்கு எதிராக தேசத்துரோக சக்திகள் அணி சேர்ந்து, தங்கள் இலக்குகளை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை நாடுகின்றன. இவர்கள் மிகவும் நுட்பமாக பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இந்த நாட்டு மக்கள் எப்போதும் விவேகத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தரவுகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து முடிவுகள் எடுக்கப்பட்டால் எவருக்கும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. இன அல்லது மத அடிப்படையில் குடிமக்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரே சட்டம் என்ற கொள்கையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுவே எப்போதும் எமது நிலைப்பாடு.
நாங்கள் எப்போதும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறோம். கடந்த காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை மீது அரசியல்வாதிகள் மேற்கொண்டிருந்த அழுத்தத்தை மக்கள் நிராகரித்தனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளிடமிருந்து நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் திறமையான சேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன்படி, மக்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நிறைவுற்றதுமே அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடந்த பாராளுமன்றத்தினால் இது பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு செயற்குழுவின் பரிந்துரைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கொடூரமான குற்றத்தைத் திட்டமிட்ட உதவி ஒத்தாசைகள் வழங்கிய பொறுப்பானவர்கள் எவரும் சட்டத்திற்கு முகங்கொடுக்காமல் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதே போன்று இந்த நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கவும் நாம் இடமளிக்க மாட்டோம்.
நான் எப்போதும் சூழலை நேசிப்பவன். நான் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது, நகரங்களை அழகுபடுத்தல், வீடமைப்பு அபிவிருத்தி, நடைப்பாதைகள் மற்றும் நகர்ப்புற பூங்காக்கள் போன்ற அனைத்து திட்டங்களிலும் சூழலைப் பாதுகாத்து அந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தேன். வருங்கால சந்ததியினருக்காக சூழலைப் பாதுகாக்க இன்றும் எனது அரசு விசேட கவனம் செலுத்தி வருகிறது. நகர்ப்புற வனப் பூங்காக்களை அமைத்தல், பசுமை நகர திட்டமிடல், பசுமை திட்டங்கள், தேசிய மர நடுகை திட்டங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைத்தல், தரிசு நெல் வயல்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், சேதன உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் ஆகிய இவை அனைத்தும் இந்த அரசாங்கம் பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
நீங்கள் கேட்ட தலைவர் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன்.
மும்மணிகளின் ஆசிகள்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.
No comments:
Post a Comment