- Naushad Mohideen -
இலங்கையில் அடுத்த ஆண்டு பெரும்பாலும் ஒரு தேர்தல் ஆண்டாக அமையப் போகின்றது என்பது கிட்டத்தட்ட நிச்சயமான ஒரு விடயமாகவே இன்றைய அரசியல் களநிலவரங்கள் காணப்படுகின்றன. அது உள்ளுராட்சிமன்ற தேர்தலா? அல்லது பொதுத் தோதலா? அல்லது ஜனாதிபதி தேர்தலா? அல்லது இவற்றில் ஏதாவது இரண்டு தேர்தலா அல்லது மூன்றுமே ஒரே ஆண்டில் நடக்கலாமா? ஏன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும்.
உள்ளுராட்சிமன்ற அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றில் கட்சிகள் அமைக்கின்ற கூட்டணிகள் அந்தக் கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் பிரதான கட்சிகள் என்பன தான் முக்கிய விடயமாக நோக்கப்படும். ஆனால் ஜனாதிபதி தேர்தல் என்று வருகின்ற போது இந்தக் கூட்ணிகளுக்கு அப்பால் அவற்றால் வேட்பாளர்களாக நிறுத்தப்படும் தனிநபர்கள் முக்கிய இடத்iதை வகிப்பர்.
இன்றைய அரசியல் சூழலில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கப் போகும் வேட்பாளர்கள் யார்? என்பதில் தான் இப்போது நாட்டு மக்களின் கவனங்கள் திசை திரும்பி உள்ளன. அல்லது திசை திருப்பப் பட்டுள்ளன. அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் யார் என மக்களை பேச வைப்பதற்கான நாடகங்கள் கச்சிதமாக எழுதப்பட்டு அவை தற்போது பல்வேறு இடங்களிலும் அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது.
நான் இங்கே பேச விரும்புவது பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களைப் பற்றி அல்ல. அவர்கள் எப்படியும் ஏதாவது ஒரு வகையில் வெற்றி தோல்வியைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலை படாமல் மக்களை எப்படியாவது ஏமாற்றி வெற்றியடையலாம் என்ற ஒரே நம்பிக்கையில் தனிக்கட்சியாகவோ கூட்ணியாகவோ களம் இறங்குவார்கள். காரணம் அது அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நடத்தும் தொழில். அவர்களுக்கு வாழ வேறு வழி இல்லை.
இன்றைய நிலையில் என்னுடைய கவனம் ஒரு முக்கிய ஊடக சூத்திரதாரியின் பக்கம் திரும்பி உள்ளது. அதைப் பற்றித் தான் இங்கு பதிவிட விரும்புகின்றேன்.
இன்றைய அரசியல் நிலவரங்களின் கீழ் அரச தரப்பு எது எதிர்க்கட்சி எது? இன்றைய அரச தரப்பு இன்னும் எவ்வளவு காலம் அந்த அந்தஸ்த்தில் இருக்கும்? அல்லது இன்றைய எதிர் தரப்பு இன்னும் எவ்வளவு நாட்கள் அந்த நிலையில் இருக்கும் என்பதெல்லாம் தெளிவற்ற விடயங்கள். அதைப்பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையும் இல்லை.
ஆனால் நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்ளும் இன்றைய தரப்பு தனது தலைவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தி ஏனைய கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் ஆதரவோடு ஆட்சி பீடத்தை கைப்பற்றவே விரும்பகின்றது. தனித்து நின்று போட்டியிடும் துணிச்சல் அவர்களுக்கு கொஞ்சம் கூட இல்லை என்பது விவாதங்களுக்கு அப்பாற்பட்ட உண்மையாகும்.
சிதறுண்டு கிடக்கும் ஏனைய கட்சிகளினதும் இன்றைய அரச தரப்பினரதும் நிலையும் இதுவேதான் என்பதும் இங்கு மறுக்க முடியாத உண்மையாகும்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் கட்டாயம் சிறுபான்மை மக்களினதும் அமோக ஆதரவை வென்ற ஒருவராக இருக்க வேண்டும் என்ற மாயை கடந்த ஜனாதிபதி தேர்தலில் முறியடிக்கப்பட்டது. தேசிய வாத சக்திகள் அல்லது தேசியவாதம் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு பச்சை இனவாதம் பேசுகின்ற சக்திகள் எல்லாம் ஒரேயணியில் திரண்டு இந்த மாயையை முறியடித்தன. மக்கள் மனங்களில் எந்தளவுக்கு இனவாத விஷம் கலக்கப்பட்டது என்பது வரலாறு.
இப்போது இதே கோணத்தில் மீண்டும் இந்த சக்திகள் ஒன்று திரண்டு வருவதை அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை தினசரி அவதானிக்க முடிகின்றது. பல்வேறு முனைகளில் இருந்தும் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்பாவி பெரும்பான்மை இன மக்கள் இந்த மாய வலைக்குள் இனி ஒருபோதும் சிக்க மாட்டார்கள என்ற உத்தரவாதத்தை இப்போதைக்கு எவராலும் அளிக்க முடியாது.
ஆனால் இந்த சக்திகள் மத்தியில் இப்போது காணப்படும் பெரும் பிரச்சினை அவர்களின் தலைமைத்துவத்துக்கான வெற்றிடமாகும். இன்றைய நிலையில் இந்த தேசியவாத அல்லது இனவாத சக்திகளின் அணிகளுக்குள் இருந்து எவரையும் இந்த தலைமைத்துவ இடைவெளியை பூர்த்தி செய்யக் கூடியவராக அடையாளம் காண முடியவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் மலை போல் நம்பித் தெரிவு செய்த ஒரு தலைமைத்துவம் இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் கேவலமாக தோற்றுப் போன பின் ஏற்பட்ட அந்த தலைமைத்துவ இடைவெளி இன்னும் நிரப்பப்படவில்லை எனபதே யதர்ர்த்தமாகும்.
இங்கு தான் நான் முன்னர் குறிப்பிட்ட அந்த ஊடக சூத்திரதாரி இந்த தலைமைத்துவ இடைவெளியை நிரப்ப முயற்சிக்கின்றார் என்று ஊகிக்க முடிகின்றது.
அவருக்கு சொந்தமான ஊடகம் அவருக்கான களத்தை அமைத்துக் கொடுப்பதில் ஏற்கனவே பிரதான பங்காற்ற தொடங்கிவிட்டது. அதன் பிரதான செய்தி அறிக்கையில் தினசரி அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான காட்சிகள் தவறாமல் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இதவரை அப்படி இருக்கவில்லை.
அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் இதுவரை அவதானித்ததன் பிரகாரம் பௌத்த சமய முக்கியத்துவம், அவர்களின் சலாசார முக்கியத்துவம், வரலாற்று முக்கியத்துவம் என்பனவற்றோடு தொடர்புடையதாகவே அமைந்துள்ளன. போகும் இடங்களில் எல்லாம் அவர் தங்களது சிறப்புக்கள் பற்றியும் முக்கியத்துவம் பற்றியும் மீண்டும் ஒன்று பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தி வருகின்றார். அண்மையில் அவர் ஒரு கட்சியைக் கூட பெரும் விலை கொடுத்து வாங்கி உள்ளதாகவும் அரசல்புரசலாக சில தகவல்கள் கசிந்துள்ளன. பணம் என்பது இவருக்கு ஒரு பொருட்டே அல்ல.
சிதறிக் காணப்படும் தேசியவாத அல்லது இனவாத சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு முக்கிய புள்ளி இப்போதைக்கு தங்களது அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்று அறிவிக்க வேண்டிய அவசியமும் அவசரமும் தங்களுக்கு இல்லை என்றும் சரியான நேரத்தில் தங்களது வேட்பாளர் அறிமுகம் செய்யப்படுவார் என்றும் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்த ஊடக சூத்திரதாரி உரிய தயார் படுத்தல்களை முடித்துக் கொண்டு சரியான தளம் ஒன்றை அமைத்துக் கொண்டு வரும்வரை இவர்கள் காத்திருக்கின்றார்களா? அவருக்கான கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்று எண்ணத் தோன்றுகின்றது.
இவர் தேசியவாத அல்லது இனவாத சிந்தனையின் கீழான தலைமைத்துவத்தை நாட்டில் ஏற்படுத்துவதில் பிரதான பங்கு வகித்த ஊடக நிறுவனத்தின் தலைவர், அந்த ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக இருந்தவர் என்பதையும் நாடறியும். எனவே தங்களால் விடப்பட்ட ஒரு பிழையை சரி செய்யும் முயற்சியாக அந்தப் பொருப்பை தானே மீண்டும் ஏற்கத் தயாராகி வருவது போல்தான் அவரது அண்மைக்கால நிகழ்வுகள் அமைந்துள்ளன.
இவருக்கு அரசியல் அனுபவம் எதுவுமே இல்லையே என்று யாரும் யோசிக்க வேண்டாம். அப்படி எந்த அனுபவமும் இல்லாத ஒருவரை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்த பெருமை எமது பெரும்பான்மை சகோதர பிரஜைகளுக்கு உண்டு என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
No comments:
Post a Comment