Thursday, October 5, 2023

புனித இஸ்லாத்தை தழுவிய சகோதரி, உலகின் மிகவும் செல்வாக்கு மிக்கவராக தெரிவு



சுயாதீன நிருவனமான The Royal Islamic Strategic Studies Centre (RISSC), 2023 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தில் உள்ள பிரமுகர்களின் சாதனைகளை இது வருடாவருடம் மதிப்பிடுகிறது. 2022 ம் ஆண்டின் பிரபலமான முஸ்லிம் பெண்மணியாக தெரிவுசெய்யப்பட்டிருந்த  தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் ( Samia Suluhu Hassan)இன் இடத்தை 2023 ஆம் ஆண்டின் முஸ்லீம் பெண்மணியாக ஆயிஷா பெவ்லி பிடித்திருக்கின்றார்.


அல்குரான், குர்ஆன் அறிவியல்- Quranic sciences, ஹதீஸ், பிக்ஹ், தப்சீர்,தஸ்ஸாவுப் - Mysticism (Tassawuf) ,தர்க்க விஞ்ஞானம் - science of logic (இல்முல் கலாம்) உள்ளிட்ட இஸ்லாமிய துறைகளில் உள்ள புத்தகங்களை ஆங்கிலத்தில் அதிகமாக மொழிபெயர்ப்பதில் உலகிலேயே முன்னிலையில் இருக்கும் முஸ்லிம் பெண்மணி இவராவார். ஆயிஷா அப்துர்ரஹ்மான் பெவ்லி 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். அவர் பெர்க்லி – Berkeley- யில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியில் BA பட்டமும் Near Eastern  மொழிகளில் MA பட்டம் பெற்றுள்ளார். கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பீடத்தில் சூபிசம் பற்றிய ஒரு வருடம் கற்றார்.


ஹாஜா ஆயிஷாவின் குடும்பம் ஒரு வலுவான கிறிஸ்தவ குடும்பமாக இருந்தது, ஆனால் நாளடைவில் கிறிஸ்தவத்தில் ஏதோ குறைபாடு இருப்பதுபோல உணர்ந்தார், அது அவரை பல ஆண்டுகளாக ஜென் பௌத்தம் - Zen Buddhism- த்தில் ஈடுபட வழிவகுத்தது. அதேவேளை, மனிதனின் முக்கியத்துவத்தைத் தேடும் முயற்சியில், நீட்சேயில்- Nietzsche- தொடங்கி ஸ்கோபன்ஹவுர் – Schopenhauer, கன்ட், ஹெகல் என பலரினதும் வாழ்வியல் தத்துவங்களைப் படித்தார்.அதில் நீட்சேயின் இஸ்லாத்தை பரிந்துரைக்கும் நேர்மறையான வழி அவளுடன் நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டது.


இஸ்லாமிய நூல்களைப் படித்தது அவர் 1968 இல் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு வழி வகுத்தது. உலகம், உண்மையானதோ நிரந்தரமானதோ அல்ல என்பதை உணர்ந்து, உலகில் நிரந்தரமாக இருப்பதற்குப்போன்ற கட்டமைப்புவாத அணுகுமுறையை அகற்றிக்கொண்டார்.


தனது கிறிஸ்தவத்தையும் ஜென் பௌத்தத்தையும் விட்டுவிட்டு இஸ்லாத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த தனது நேரத்தை அர்ப்பணித்தார். உலகளாவிய ஆங்கிலம் பேசும் முஸ்லீம் சமூகத்திற்கான இஸ்லாமிய வாழ்க்கை மரபுகளை கூற வெளிக்கிட்டார்.


கடந்த 5 தசாப்தங்களாக இஸ்லாமிய கலை கலாச்சார நூல்களை  மொழி பெயர்ப்புச் செய்துவரும் ஹாஜா ஆயிக்ஷா,அவரது கணவர் அப்துல் ஹக் பெவ்லி (Abdal haqq Bewley) யுடன் இணைந்து புனித அல்குர்ஆனையும் இமாம் குர்துபியின் குரான் விளக்கவுரையையும் மொழிபெயர்த்துள்ளார். மூன்று மொழிகளில் 83 படைப்புக்களின் 172 வெளியீடுகளுக்கு ஆசிரியராக அல்லது மொழிபெயர்ப்பாளராக ஹாஜா ஆயிக்ஷா விளங்குவதாக The world Cat union catalog பட்டியல் கூறுகின்றது.


ஹாஜா ஆயிஷாவின் பல படைப்புகள் அவரது இணையதளத்தில் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் அல்-முவத்தா, மற்றும் காதி இயாதின் அஷ்-ஷிபா ஆகிய மொழிபெயர்ப்புக்க நன்கு அறியப்பட்டவை. இப்னு சாத் அவர்களின் தபகாத் எனும் நூல்களின் தொகுதியும் அவரின் மொழிபெயர்ப்புகளில் ஒன்றாகும். இப்னு கயீமின் மரணத்திற்குப் பிறகு ஆத்மாவின் பயணம் - The Soul's Journey After Death, இப்னு சிரினின் "கனவுகளின் விளக்கம் - The Interpretation of Dreams என்பனவற்றையும் குறிப்பிடலாம்.


நூல்களை வெளியிடுவதோடு நின்றுவிடாமல், தனது குடும்பத்தினருடன் நைஜீரியா, பெர்முடா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று, இஸ்லாம் பற்றிய அறிவைப் அந்நாடுகளில் பரப்பவும்,அங்கெல்லாம்  முஸ்லிம் சமூகங்களை நிருவனப்படுத்தவும் உதவினார். ஹாஜா ஆயிக்ஷா  முதல் மதீனா சமூகத்தின் மாதிரியைப் பின்பற்ற முயல்கின்றார். அவரது வாழ்க்கையின் பணிகள் பாராட்டுக்குரியவைகள்,முன்மாதிரியானவைகள்.


அல்லாஹ் அவரின் பணிகளை ஏற்று நற்கூலியை வழங்குவானாக.


AKBAR RAFEEK

No comments:

Post a Comment