நாயை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.
கிளிநொச்சியில் உள்ள குடியிருப்பாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வளர்ப்பு நாயை கடத்தி கட்டிவைத்து பராமரித்ததாக அயலவர் மீது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
குற்றஞ்சாட்டவர் சார்பில் அவரது சட்டத்தரணியினால் பின்வருமாறு மன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. “இந்த வழக்குடன் தொடர்புடைய நாயை குற்றஞ்சாட்டப்பட்டவரே வளர்த்து வந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் அயல் வீட்டில் உள்ள அதே இன நாயுடன் இன விருத்திக்காக சேர்க்கப்பட்டது. அதன் பின் சில நாட்களில் குற்றஞ்சாட்டப்பட்டவரது வளர்ப்பு நாயைக் காணவில்லை.
இந்நிலையிலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது நாய் தனது பழைய எஜமானரை வீடு தேடி வந்துள்ளது. அதன் பின் ஆராய்ந்த போது, அயலவர் குறித்த நாயை வேறு ஒரு இடத்தில் வசிக்கும் தனது மகளின் வீட்டுக்கு களவெடுத்துச் சென்று வளர்த்துள்ளார்.
இந்நிலையில் அவரது மகள் தூரப் பயணம் செய்வதனால் நாயை சில நாள்களுக்கு முன் அழைத்து வந்து பெற்றோரின் வீட்டில் விட்டுச் சென்ற நிலையிலேயே தன்னை வளர்த்தவர் வீட்டுக்கு நாய் மீண்டும் வந்துள்ளது.
இந்நிலையில் அதனையே அயலவர் தனது நாய் என்று உரிமை கோருகிறார். இந்த நாயின் பரம்பரையுள்ள பெண் நாய் ஒன்று தற்போதும் உள்ளது. அதனது மரபணுவையும் இந்த நாயினது மரபணுவையும் பரிசோதனை செய்ய கட்டளையாக்கவேண்டும்” என சட்டத்தரணி சமர்ப்பணம் முன்வைத்தார்.
இதனை ஆராய்ந்த மன்று கிளிநொச்சி மாவட்ட விலங்கியல் மருத்துவ அதிகாரி ஊடாக இரண்டு நாய்களது மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கட்டளையிட்டது.
இந்நிலையில் வளர்ப்பு நாயால் அயலவர்கள் நீதிமன்றம் சென்ற விசித்திர சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment