Thursday, March 6, 2014

துபாய்க்கு சுற்றுலா செல்வதாக கூறி, சவூதி செல்ல முயற்சி 13 பெண்கள் கைது



(Tn) சுற்றுலா வீசாவில் துபாய் செல்வ தாகக் கூறி சவூதி அரேபியாவுக்கு வேலை வாய்ப்புக்காக செல்ல முற்பட்ட 13 பெண்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



இவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா இரண்டு கடவுச் சீட்டுகள் வீதம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



சுற்றுலா வீசாவில் துபாய் செல்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் ஒரு கடவுச்சீட்டை காண்பித்து உள்ளே சென்ற பின்னர் சவூதி செல்வதற்கான கடவுச் சீட்டை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் காண்பித்து செல்லும் திட்டத்துடனேயே இவர்கள் விமான நிலையத்துக்கு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்கள் குடும்ப பின்னணிக்கான சான்றிதழ், பயிற்சிச் சான்றிதழ், வைத்திய அறிக்கை, போன்றவை சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை பெற்றுக் கொள்ளாமல் பணியக அதிகாரிகளை ஏய்த்துவிட்டு செல்லும் முயற்சியையே இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.



கிளிநொச்சி, வெலிகந்த, கம்பஹா, கிரிந்திவல மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சப் ஏஜண்ட் ஒருவரின் மூலம் இவர்கள் சவூதி செல்ல முயன்றுள்ளனர்.



இவ்வாறு சுற்றுலா வீசாவில் செல்பவர்களுக்கு வெளிநாட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் பணியகம் எவ்வித பொறுப்புக் கூறலுக்கும் முன்வரமாட்டாது என்பதும் சுற்றுலா வீசாவில் எவரையும் செல்ல வேண்டாம் என்றும் பணியகம் கேட்டுக்கொள்கிறது. கைதான பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பணியகம் ஆயத்தமாகியுள்ளது.




No comments:

Post a Comment