Tuesday, March 4, 2014

காசா மீது சட்டவிரோத இஸ்ரேல் விமானத் தாக்குதல்





காசா பகுதியில் நேற்று இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இஸ்ரேலிய ராணுவத் தகவல் தொடர்பாளரின் அலுவலகத்திலிருந்து வெளியான அறிக்கை இந்தத் தாக்குதல் பாலஸ்தீனத்தில் உள்ள ராக்கெட் ஏவுகணைத் தளத்தைக் குறி வைத்து செலுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது.



வடக்கு காசா பகுதியில் ராக்கெட்டுகளை வீச ஆயத்தம் செய்துகொண்டிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் விமானப்படை தாக்குதலை நடத்தியது. மேலும் தெற்கு இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.



கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் ஏவுகணைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட இஸ்ரேலிய செய்தி ஊடகம் தவறுதலாக காசா பகுதியிலேயே விழுந்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்றும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர்ப்பலி எதுவும் நடைபெறவில்லை. ஆனால், ஒரு வருடம் அமைதியாக இருந்த காசா பகுதியில் மீண்டும் சச்சரவுகள் துவங்கியுள்ளதை இந்த சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.



இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஏவுகணைத் தாக்குதல்கள் கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ளதும், எல்லைப்புறத் தாக்குதல்கள் தொடருவதும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளிடையே ஒரு புதிய மோதலுக்கான சாத்தியத்தைத் துவக்கியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் காசா பகுதியில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த பாலஸ்தீனிய அரசை வெளியேற்றிய ஹமாஸ் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் இஸ்ரேலின் அமைதிப் பேச்சுவார்த்தையை எதிர்த்து வருகின்றது.



இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாமை சந்தித்த நிலையில் நேற்றைய தாக்குதல் நடந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment