Monday, May 5, 2014

ஞானசார தேரரை காப்பாற்றிய கோத்தா..!



(Tw) பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் உறுப்பினர்களை பிணையில் எடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கொழும்பு நிப்போன் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றை குழப்பியமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் பொதுபல சேனா அமைப்பினருக்கு பிணை வழங்கப்பட்டது.



கோத்தபாயவுக்கு நெருக்கமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அனுர சேனாநாயக்க, பொலிஸார் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே பிணை வழங்கப்பட்டுள்ளது.



ஞானசார தேரர் உட்பட பொது பல சேனா அமைப்பின் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட போவதாக தகவல் பரவியதை அடுத்து கோத்தபாய ராஜபக்ஷ உடனடியாக பிரதம நீதியரசரை தொடர்பு கொண்டார்.



விளக்கமறியலில் வைக்கப்படுவது ஜனாதிபதிக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் புரிந்துணர்வுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என பிரதம நீதியரசர், கோத்தபாயவிடம் கூறியுள்ளார்.



எனினும் அதனை நிராகரித்த கோத்தபாய உடனடியாக ஜனாதிபதியை தொடர்பு கொண்டார்.



பொதுபல சேனாவுக்கு அரசாங்கத்திற்கும் இருக்கும் புரிந்துணர்வு மக்களுக்கு தெரியாது என்பதால், பொதுபல சேனா அமைப்பின் பிக்குமாரை விளக்கமறியலில் வைத்தால், சிங்கள பௌத்த மக்கள் அரசாங்கத்தின் மீது ஆத்திரமடைவார்கள் என கோத்தாபய, ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.



இதனையடுத்து விரும்பியவாறு செய்யுமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளரிடம் கூறியுள்ளார்.



இதன் பின்னர், ஜனாதிபதியிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொண்ட பிரதம நீதியரசர், கோட்டை நீதவான் திலின கமகேவை தொடர்பு கொண்டு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு எழுதி கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர், பிக்குமாரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.



இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதம நீதியரசர், தலவத்துகொட மொனேஸ் ஹோட்டலில் வைத்து நேற்றிரவு அனுர சேனாநாயக்கவிடம் வழங்கிய அறிக்கையை அவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.



பொதுபல சேனாவின் செயற்பாடுகளில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் நடவடிக்கைகளால் இலங்கையில் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இலங்கையின் குற்றவியல் சட்டத்திற்கு அமைய மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை பிடியாணையின்றியே கைது செய்ய முடியும்.



அத்துடன் கொம்பனித் தெரு பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் அந்நிய மதத்தினரால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பை குழப்பியதாகவும் புனித குர் ஆனை அவமதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.



இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிணை வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



எவ்வாறாயினும் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதை எவரும் எதிர்க்கவில்லை என்பதால், பிணை வழங்கி உத்தரவிடுவதாக கோட்டை நீதவான் திலின கமகே தனது உத்தரவில் கூறியுள்ளார்.



இறுதியில் சட்டத்தை தலைகீழாக மாற்றி பாதுகாப்புச் செயலாளர் தனது வலது கரமான பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரையும் ஏனைய பிக்குகளையும் விளக்கமறியலுக்கு செல்லாது பாதுகாத்து கொண்டார்.


No comments:

Post a Comment