Friday, June 20, 2014

பாணந்துறை நோலிமிட் மீது 6 பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு, கொளுத்தப்பட்டது (படங்கள்)





பாணந்துறை நோலிமிட் நிறுவனம் மீது இன்று அதிகாலை வேளையில் 21-06-2014 6 பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு, திட்டமிட்டு காடையர் கும்பலினால் தீ மூட்டப்பட்டுள்ளதுடன், தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைப்பதற்கான தண்ணீரும் இருக்கவில்லையென முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.



முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பாசிச இனவாத நடவடிக்கைகள் தொடருவதாகவும், இது எங்குசென்று முடியுமென்பது தெரியவில்லையெனவும் அவர் கவலையுடன் குறிப்பிட்டார்..



இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை காட்சியறைகளில் நோலிமிட் நிறுவனம் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்றும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இந்த நிறுவனத்தின் மூலம் வருமானத்தைப் பெற்று வந்துள்ளனர்.



இந்நிறுவனம் சுமார் ஐயாயிரம் ஊழியர்களைக் கொண்டதும், நாட்டின் முக்கிய நகரங்களில் பல கிளைகளை் கொண்டதுமாகும். இந்நிலையில் பாணந்துறை நகரின் அரச மருத்துவமனை அருகில் அமைந்திருந்த நோலிமிட் நிறுவனத்தின் காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.



நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் உள்ளே தங்கியிருந்த நிலையில், பொதுபல சேனா தீவிரவாதிகள் வெளியிலிருந்து நோலிமிட் காட்சியறைக்குத் தீவைத்துள்ளார்கள். தீ வேகமாகப் பரவிய நிலையில், உள்ளே தங்கியிருந்த ஊழியர்கள் ஏழு பேர் பெரும் சிரமத்தின் மத்தியில் உயிர் தப்பியுள்ளனர். ஏனைய ஊழியர்களின் நிலை குறித்து தகவல்கள் தெரியவில்லை. இதற்கிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வண்டிகள் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.



2ம் இணைப்பு



பாணந்துறை நோ லிமிட் வர்த்தக நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாணந்துறையில் அமைந்துள்ள நோ லிமிட் என்ற முன்னணி ஆடை வர்த்தக நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.



இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ வைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சேதம் பற்றிய மதிப்பீடுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. நோ லிமிட் வர்த்தக நிறுவனம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்ற அடிப்படையில் இதற்கு முன்னரும் பொதுபல சேனா போன்ற பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்கள் மஹரகம உள்ளிட்ட சில கிளைகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















No comments:

Post a Comment