பொதுபல சேனா அமைப்பை நம்பும் நாட்டுப்பற்றுள்ள சிங்கள மக்கள் வதந்திகளை நம்பாமல், பொறுமையுடன் செயற்பட வேண்டும். ஞானசார தேரரைக் கைது செய்ய வேண்டும். பாதுகாப்புச் செயலாளரின் பின்னால் நின்று செயற்படுகின்றார் என கூச்சலிடும் அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எம்.பிக்களும் இந்த சம்பவத்தின் ஆரம்பம் என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
கொழும்பு, கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை சர்வதேச அழுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ள இவ்வேளையில் பௌத்தர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அமைச்சர்கள் மக்களைத் தூண்டி விடும் வகையில் பேசக் கூடாது.
நாடு முழுவதும் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. சமாதானத்தை விரும்பும் மக்கள் வன்முறையை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். அளுத்கம, தர்கா நகர், பேருவளை சம்பவங்களின் உண்மைத் தன்மை அறியாமல் சில ஊடகங்கள் பிழையான செய்திகளை வெளியிட்டன. இதனால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப் பெயர் ஏற்படும். அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எம்.பிக்கள் உண்மையை உணர்ந்து ஆராய்ந்தறிந்து பேச வேண்டும்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் லண்டன் பி.பி.சி.க்கும் அல் - ஜஸீரா தொலைக்காட்சிக்கும் பொதுபல சேனாஅமைப்பின் மீது பழியை சுமத்தி இந்தப் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தியுள்ளார். இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர்கள் சிலரும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எம்.பிக்களும் எம் மீது குற்றத்தை சுமத்திவிட்டு தப்பிக்க முயல்கின்றனர்.
போயா தினமான 12 ஆம் திகதியன்று இச்சம்பவம் ஆரம்பமானது. பௌத்த தேரரொருவர் தாக்கப்பட்டார். அப்போது எந்த அமைச்சர்களும் இது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை. விடயம் பூதாகரமாக உருவெடுக்கவும் அவர்கள் எம்மீது குற்றம் சுமத்தி குளம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கின்றனர்.
அன்றைய தினமே அந்தப் பௌத்த தேரரிடம் மன்னிப்பு கோரியிருந்தால் இச்சம்பவம் இந்த நிலைக்கு வந்திருக்காது. ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.ஒருவர் தனது இணையத்தில் புலனாய்வுப் பிரிவினர் இச்சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும்.தர்கா நகர் கூட்டம் முடிவடைந்த பின்னர் நாம் அங்கு இருந்த போதே நாலா புறங்களிலுமிருந்து எம்மை நோக்கி கூச்சலெழுந்தது. நாம் திரும்பி வரும் போது எம் மீது கற்கள் எறியப்பட்டன.
ஆனால், இப்போது பொதுபல சேனா அமைப்பின் மீது பழி சுமத்தப்படுகின்றது. மேலும் பதுளை, மாவனெல்ல போன்ற நகரங்களில் ஊர்வலம், கூட்டங்களை நடத்துவதற்கு
பொது பல சேனா அமைப்புக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையை பெற்றுள்ளனர். ஆனால் வேடிக்கை என்ன வென்றால் இந்த நகரங்களில் கூட்டங்களை நடத்த பொது பல சேனா அமைப்பு அனுமதி கோர வில்லை என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment