சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் இறுதி தருணம் இதுவாகும். அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் முட்டிமோதிக்கொள்ளும் அமைச்சரவை இலங்கையில் மாத்திரமே காணப்படுகின்றது என்று ஐ.தே.க. வின் காலி மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
தேவையற்ற முறையில் அதிகமான வைபவங்கள் இடம்பெறும் நகரமாக அம்பாந்தோட்டை உலக சாதனை படைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐ.தே.க. வின் தலைமையகமான சிறி கொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்த வெற்றிக்கு பின்பு மக்கள் சமாதானம், ஐக்கியம், அபிவிருத்தியை எதிர்பார்த்தனர். இருப்பினும் இவற்றை நடைமுறைப்படுத்த இவ்வரசினால் முடியவில்லை.
இனங்களுக்கிடையே குரோதம் ஏற்படுமானால் நாட்டில் அராஜகமே உருவெடுக்கும். எனினும் இனவாத தூண்டுதல்களை அரசு கண்டுகொள்ளாமல் தட்டிக்கழிக்கிறது.
இதேவேளை இவற்றை கருத்திற்கொள்ளாத அரசு களியாட்ட நிகழ்வுகளையே மேற்கொண்டு வருகிறது. தேவையற்ற முறையில் மக்களுடைய பணத்தை விரயம் செய்து அம்பாந்தோட்டையிலேயே அதிகமான வைபவங்களை ஏற்பாடு செய்து அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது.
மாகம் புற துறைமுகத்திற்கு கப்பல்கள் வந்தாலும், சென்றாலும் வைபவங்களை நடத்துவதுடன் கப்பல்களுக்கு பெற்றோல் நிரப்புவதனையும் வைபவமாக அரசாங்கம் கொண்டாடுகின்றது. இதற்காக மக்களுடைய பணத்தைக் கொண்டு பத்திரிகைகளில் விளம்பரங்களை பிரசுரிக்கின்றது.
கல்வி, சுகாதாரத்துறைகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் கார்ப்பந்தயம் திரைப்பட விழாக்களுக்கு மக்களுடைய பணத்தை அரசு வீண்விரயம் செய்து வருகின்றது
இவ்வரசின் இறுதித் தருணம் இதுவாகும். மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளமை ஒருபுறமிருக்க அரசின் அமைச்சர்களும் வெறுப்படைந்த நிலையி
லேயே உள்ளனர். தற்போது அமைச்சரவையில் அமைச்சர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலை உருவெடுத்துள்ளது.
அமைச்சர்கள் ஒருவரையொருவர் முட்டி மோதிக்கொள்ளும் அமைச்சரவை இலங்கையில் மாத்திரமே காணப்படுகின்றது என்றார்.
No comments:
Post a Comment