(எஸ்.எம்.அல் அமீன் SLAS )
கல்வியில் நம் சமுகம் சில விரல் சுட்டக்கூடிய பிராந்தியங்களில் முன்னேற்றம் கண்டாலும் கூட பல்வேறு சிறு சிறு நிலபுலங்களில் நம்மவர்நிலை எம்மை மிகவும் கவலைகொள்ளச் செய்கின்றது. அதை விடவும் மிகப் பாரதூரமான ஆய்விடயம் எம்மவர் கற்றுள்ள கல்விக்கு ஏற்ப, உயர்பதவிகளில் இருக்கின்றனரா? என்பதாகும். இல்லை எனும் விடை பெரும்பாலும் தெளிவானதே. ஒரு சிலர் விதிவிலக்கு.
இந்நிலை ஏற்பட காரணம் என்ன என்பதை அலசுவதே இக்கட்டுரையாகும்.
இலங்கையில் உயர்பதவிகளுக்கென்று ஆட்சேர்ப்பு செய்யப்படும் நடைமுறைகளில் சிறுபான்மையினரின் மீதான கரிசனைகளை நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சைகள் முறைமை பெருமளவு வெளிப்படைத்தன்மை கொண்டவை என்பதால் நமது சமுகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். நம்மவர்கள் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறு பகுதியேனும் இலங்கையின் அதி உயர் உத்தியோயோகத்தர் தெரிவுகளுக்கான உயர்தர போட்டிப்பரீட்சைகளுக்கு கொடுப்பதில்லை.
5 வயதில் ஆரம்பிக்கும் கல்வியை 25 வயதில் பட்டம் ஒன்றோடு நிறுத்திக்கொள்கின்றனர். இந்தப்பட்டம் பெரும் நோக்கம் அறிவுக்கே என்றால் அவர்கள் நிறுத்தலில் தவறுள்ளது. மாறாக அறிவோடு வாழ்வாதாரத்தினையும் இப்பட்டப்படிப்பு நிறைவு செய்ய வேண்டும் என்றால்... பெற்ற கல்வியின் சாரத்தினை அக்கல்வித்தரத்தின் உச்சம்வரை தொடுவதற்கு பயன்படுத்துவதே சிறந்தது. பட்டதாரி என்றாலே கல்விமானுக்கான அடிப்படை வாயிலில் வந்துவிட்டார்கள். அங்கிருந்துதான் அவர்களின் வெற்றி முயற்சிகள் மேலும் வினைத்திறனாக்கப்படல் வேண்டும்.
குறித்த காலத்தில் ஏதேனும் ஒரு அதி உயர் போட்டிப்பரீட்சையினை இலக்காக கொண்டு தன்னம்பிக்கை- முறையான பயிற்சி- தொடர் அர்ப்பணிப்பு என்பவற்றுடன் நகர்ந்தவர் எவரும் தொடராக தோற்றவர் இல்லை. ஒரு தொடரில் வென்றே காட்டியுள்ளனர். எனவே உங்கள் எண்ணங்களை சீராக்கி சரியாய் முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிட்டும் அது இன்றோ மறுநாளோ என்பதே நிச்சயமற்றது. அனால் என்றோ ஒருநாள்...
எம்மவர் கல்விமுறை எல்லா வகையறாக்களையும் அதிகம் இலவசப்பண்டமாய் கரங்களுக்கே கொண்டு வந்து கொடுத்தே எம்மவரை தேடல்களற்ற சோம்பேறிகளாக்கி விட்டது. போட்டிப்பரீட்சைகள் அதிகம் தேடல்திறனை உள்ளடக்கியதாகவே அமைகின்றன. எனவே குறுகிய கால இலக்கொன்றில் எமது பாடசாலை பல்கலைக்கல்வி அடிப்படைகளை ஆயுதங்களாக்கி அவற்றுக்கான ரவைகளை இந்த அண்ட சராசரத்தில் அகலத் தேடுபவனே வெற்றி பெறுகிறான். அல்லது அத்தேடலாளனை தன் வளமாக்கி கொண்டவன் வென்றுவிடுகின்றான். நீங்கள் உங்கள் தேடல்களுக்கு நூலகங்களை இணையங்களை வளவாலர்களை உரித்தாக்கிக் கொள்ள முயல்வது சிறந்தது.
எமது இளைஞர் மட்ட பிரச்சினை என்னவென்றால் முற்றத்து மல்லிகைகளை தங்கள் மலர்மாலைகளுக்கு பயன்படுத்த ஆர்வம் காட்டாமையாகும். தேடல் வேண்டும் ஆனால் தேடல்வழிகள் தேடியோரிடம் இருந்தே பெறப்படலும் வேண்டும். இல்லையென்றால் உன் தேடல் தொடரும் தேடியதும் தவறும். உள்ளூர் வளங்களை உபயோகிக்கக் கற்றுக்கொள்ளாமையும் நம்மவர் குறையே...
இவ்வாறான முயற்சிகளுக்கு இறை நம்பிக்கை கலந்த உங்கள் தன்னம்பிக்கை மிகவும் முக்கியமாகும். நேற்று வென்றவன் என் சகோதரன் . இன்று வெல்பவன் என் சகோதரன். நாளை வெல்லப்போவது ஏன் நானாய் இருக்க கூடாது? என உங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு அடிப்படை நேர் புள்ளி என்ன தெரியுமா? நீங்கள் எல்லோருமே பட்டதாரிகள் தானே! அப்போது ஏன் உன்னால் இயலாது? இன்று உசேன் போல்ட் முதலிடம் நான் இரண்டு அல்லது ஐந்து . நாளையும் அவ்வாறே. மறு நாளும் அவ்வாறே. அனால் என்றோ ஒருநாள் உசேன் போல்ட் விருது அளிக்கும் மேடையிலாவது நான் வெற்றியாளனாய் இருப்பேன். ( இதுதான் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்)
எம்மவரிடையே உள்ள மிகப்பாரிய குறைபாடு ... ஏற்கனவே வென்றவர்கள் பின்னால் முயற்சிப்போருக்கு அதிகமாய் உதவுவதும் இல்லை உத்வேகம் அளிப்பதுமில்லை என்பதாகும். இது மிகப்பெரிய பின்னடைவுகளை நம் சமுகத்தில் ஏற்படுத்தி விடுகின்றது. இது ஒரு சாபக்கேடு என்றும் தைரியமாக சொல்லலாம். அல்லாஹ் எமக்களித்த அமானிதம் கல்வியாகும். அதனை மறு சந்ததியினருக்கு பக்குவமாய் ஒப்படைக்க வேண்டும். சமூக வரிப்பணத்தில் நாம் கற்று அதனூடே சம்பளம் சுகபோகம் அனுபவிக்கும்போது... நமது முயற்சி மட்டுமே நமது அடைவின் அடிப்படை என நெஞ்சை நிமிர்த்திக் கொள்வது அநியாயமாகும்.
எம் தலைவர்களும் எமது கற்ற வர்க்கத்தினரின் கரைகாணலில் குற்றம் கூறப்பட வேண்டும். இன்றைய போட்டி உலகில் நாங்கள் பொருளாதார சமுக கல்வி அரசியல் மட்டங்களில் மட்டும் முன்னேறுவதை கவனிப்பது மட்டும் அரசியலாளர் பொறுப்பல்ல. எம் நாட்டின் உயர் இடங்களில் எம்மவரை உட்புகுத்த ஆவன செய்ய வேண்டும். அதை இவர்கள் கடைக்கண்ணால் கூட பார்க்காமை இன்றைய துரதிர்ஷ்ட வசமாகும். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கே இவர்கள் அதிகம் இடம் கொடுக்கின்றனர். அதுவல்ல இன்றைய தேவை. இன்று எம்மவர் பாடசாலைக்கல்வியில் தன்னியக்கமாகவே முன்னேற ஆரம்பித்துவிட்டனர். நீங்கள் நிறுத்தும்படி பணித்தாலும் அது நிகழாது. அனால் அதனை முடித்ததும் அவர்களின் தொழில் நிலை என்ன? இதனையே அரசியல் அலச வேண்டும்.
எனவே இவற்றினை உணர்ந்து இப்பாரிய பள்ளத்தினை நிரப்புவதற்கு நாமும் சில மணல் குவியல்களை கொடுப்போம் என இன்றிலிருந்து எண்ணம் ( நிய்யத்) வைத்துக் கொள்வோமாக ! எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மை பொருந்திக்கொள்வானாக !
No comments:
Post a Comment