Thursday, July 3, 2014

முஸ்லிம்களின் முதல் எதிரி சரத் வீரசேகர - பைசால் காஸிம்



பிரதியமைச்சர் சரத் வீரசேகர, பொதுபலசேனா எனும் தீவிரவாத அமைப்பின் முகவராக செயற்படுகின்றார் என தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான பைசால் காஸிம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்ற இவர், இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றார் எனவும் குற்றம் சுமத்தினார்.



இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;



''ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வொன்று கடந்த திங்கட்கிழமை பேருவளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.



இதன்போது, தர்கா நகரைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெளத்த தேரரை தாக்கியமையினாலேயே குறித்த பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாகவும், இதற்கான அனைத்துப் பொறுப்புக்களையும் முஸ்லிம்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் குறித்த தாக்குதலை முஸ்லிம்கள் மேற்கொண்டிரா விட்டால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாட்டை காட்டிக்கொடுப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளை வெளிநாட்டு இராஜதந்திரிகளை தினமும் அமைச்சர் ஹக்கீம் சந்தித்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றார். இதனால் அவரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



முஸ்லிம் மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்ற இவர், இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றார். இதனை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் உணர வேண்டும்.



அத்துடன், சொற்ப இலாபங்களுக்காக பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவின் இணைப்பாளர்களாக செயற்படுபவர்கள் குறித்த பதவிகளை இராஜினாமாச் செய்ய வேண்டும். இல்லா விட்டால் குறித்த இணைப்பாளர் பதவியிலுள்ள முஸ்லிம்களுக்கும் பொதுபலசேனாவிற்கும் ஆதரவளிப்பவர்கள் என மக்கள் கருத வேண்டி ஏற்படும்.



முஸ்லிம்களுக்கு எதிரான பொதுபலசேனாவின் முகவராக செயற்படுகின்ற பிரதியமைச்சர் சரத் வீரசேகரவிற்கு அடுத்த தேர்தலில் முஸ்லிம்கள் யாரும் வாக்களிக்கக்கூடாது என்பதுடன் வாக்கு கேட்டு முஸ்லிம் பிரதேசங்களுக்கு வர அனுமதிக்கவும் கூடாது.



முஸ்லிம்களின் ஆதரவாளன் போன்று நாடகமாடும் இவரே முஸ்லிம்களின் முதல் எதிரியாவார். இவர் குறித்து அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மாத்திரமின்றி முழு இலங்கை வாழ் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment