சட்டத்தரணிகளை இழிவுபடுத்தக் கூடாது என பொதுபல சேனா இயக்கத்திற்கு, நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சட்டத்தரணிகளை அவதூறு செய்யும் வகையிலான கருத்துக்களை வெளியிடக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் நீதிமன்றின் அதிகாரிகளாகவே கருதப்படுவர். எனவே சட்டத்தரணிகளை அவமரியாதை செய்வது நீதிமன்றக் கட்டமைப்பை இழிவுபடுத்துவதற்கு நிகரானது. இதனை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்தவொரு கட்சிக்காரர் சார்பிலும் நீதிமன்றில் முன்னிலையாகும் உரிமை சட்டத்தரணிகளுக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதி கொழும்பு ஹோட்டல் ஒன்றில் ஜாதிக பல சேனா என்ற இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் மீது பொதுபல சேனா இயக்கம் தாக்குதல் நடத்தி, அங்கிருந்தவர்களை கடுமையாக தூற்றிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் முறைப்பாட்டாளர் வட்டரக்கே விஜித தேரர் சார்பில் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன உள்ளிட்ட சிலர் முன்னிலையாகியிருந்தனர்.
விசாரணைகளின் பின்னர் கலகொடத்தே ஞானசார தேரர் சட்டத்தரணி மைத்திரி குணரட்னவை கடுமையாக சாடியிருந்தார்.
இது தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து நீதவான் இந்த எச்சரிக்கையை ஞானசார தேரருக்கு வழங்கியுள்ளார்.
குர் ஆனுக்கு எதிரான போராட்டம் தொடரும்: ஞானசார தேரர்
சட்டத்தரணி மைத்திரி குணரட்னவை அவமதித்தமை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கொழும்பு கோட்டை நீதவான் இன்று எச்சரித்துள்ளார்.
கொழும்பு கொம்பனித் தெரு நிப்போன் ஹொட்டலில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பான வழக்கில் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன ஆஜரானார்.
வழக்கு விசாரணைக்கு பின்னர், வழக்கில் ஆஜராகியமைக்கான மைத்திரி குணரட்னவை ஞானசார தேரர் நாய் என்ற அவமதித்துள்ளார். இதனையடுத்து குணரட்ன சம்பவம் குறித்து கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, கோட்டை நீதவான் திலின கமகே, ஞானசார தேரரை எச்சரித்ததுடன், சட்டத்தரணிகள் நீதிமன்ற சேவைகளை செய்வதாகவும் அவர்களின் கடமைகள் குறித்து குற்றம் சுமத்தக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஞானசார தேரர், குர் ஆனை அவமதித்தார என்பதை அறிய அவரது உரை அடங்கிய ஒளி நாடா முஸ்லிம் மத விவகார பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் அவற்றை பொருட்படுத்தாத ஞானசார தேரர், இன்று வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய போது, விளைவுகள் பற்றி கவலையில்லை எனவும் குர் ஆனுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment