Sunday, September 21, 2014

ஹக்கீம் - றிசாத் வியூகம் நிராகரிப்பு, பரீட்சாத்த முயற்சியும் தோல்வி - ஹசன் அலி ஒப்புதல்



அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, சூறா கவுன்சில் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் வழங்கிய வழிகாட்டலின் அடிப்படையிலேயே பதுளை மாவட்டத்தில் ரவூப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் இணைந்து இணைந்து தமது வேட்பாளர்களை பொது சின்னத்தில் நிறுத்தினர். இருந்தபோதும் இதனை பிரதேச முஸ்லிம்கள் நிராகரித்துவிட்டனர் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி.யுமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன்னர் கூறினார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,



பதுளை மாவட்ட மொத்த முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரம் ஆகும். எங்களுக்கு 6 ஆயிரம் அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளன. முஸ்லிம் தரப்பில் ஒரு ஆசனம் கிடைப்பதற்கு இன்னும் 20 ஆயிரம் வாக்குகள் தேவைப்பட்டிருக்கும்.



இந்நிலையில் முஸ்லிம்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு செல்லவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெருமளவில் சென்றுள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாலும், அது எத்தகைய செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழமையாக வாக்களிக்கும் முஸ்லிம்களே இம்முறையும் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.



அதேநேரம் கடந்த பதுளை மாவட்ட தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 4 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. தற்போது 5 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் அல்லது வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் இல்லை.



அதேவேளை பதுளையில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து வாக்கு கேட்கும் கலாசாரம் தோல்வி கண்டுள்ளது. இதனை பிரதேச மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையே தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. இந்த பரீட்சாத்த முயற்சியை தொடர்வதா இல்லையா என்பதை எதிர்வரும் காலங்களில் தீர்மானிப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.


No comments:

Post a Comment