Saturday, September 6, 2014

தேர்தல் கால 'பைஅத்' நன்மை தருமா...?



AG.முஹம்மது பழீல்,

ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி.



ஊவா மாகாண சபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கின்ற நிலையில் ஒவ்வொருதரப்பினரும் மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக பல்வேறு புதுப்புது வியூகங்களை வகுக்கத்தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம்களின்வாக்குகளைக் கவருவதற்காகாவும் புதிய புதிய திட்டங்கள் கட்சிகளினால் அறிமுகப்படுத்தப் படுகின்றன.



முஸ்லிம்கள் இனவாதத்தை ஊக்குவிக்கும் அரசாங்கக் கட்சிகளுக்கு எப்படியும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது துல்லியமாகத் தெரிந்த நிலையில், மத்திய அரசாங்கத்திலும் மாகாண சபைகளிலும்அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளாக இருக்கின்ற SLMCயும் ACMCயும் தாம்தனித்தரப்பாகப் போட்டியிடப் போவதாக களத்தில் குதித்தனர். இது முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்காக அவர்கள் போட்ட முதலாவது திட்டமாகும். இருப்பினும் இதனை நம்புவதற்கு பதுளை மக்கள் தயாராக இல்லை என்பதனைக் கடந்த சில வாரங்களில் புரிந்துகொண்ட இவர்கள் தற்போது தமது இரண்டாவது திட்டத்தினை அமுல்படுத்தியுள்ளனர். அதுதான் சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் மேற்கொண்ட பைஅத் அல்லது சத்தியப் பிரமாணமாகும். உலமாக்களையும் ஊர்ப்பிரமுகர்களையும் அழைத்து பைஅத் என்ற பெயரில் ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டால் மக்கள் அதனை நம்பிவிடுவார்கள் என்ற கடைசி நம்பிக்கையுடனேயே இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.



இவ்வாறான உறுதிமொழிகளை மக்கள் கடந்த காலங்களில் நம்பினார்கள் என்பது உண்மையே. அதுபோலவே அவ்வாறு நம்பி வாக்களித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தேர்தல்களின் பின்னர் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்பதும் உண்மையே. இந்த வரலாற்று உண்மையை மனதில் முன்னிறுத்தியே SLMC மற்றும் ACMC கூட்டணியினரால் பதுளையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளையும் பார்க்கவேண்டியுள்ளது. மேலும் இந்த உறுதி மொழிகள் நம்பத் தகுந்தவையா அல்லது இவைகளில் ஏதும் நன்மை கிடைக்குமா? என்பதும் இங்கு ஆழமாகச் சிந்திக்கப்படவேண்டியதொன்றாகும்.



SLMCயினைப் பொறுத்தவரையில் தேர்தல் காலங்களில் மக்களுக்கு பைஅத் - வாக்குறுதிகளை வழங்குகின்ற வரலாறு என்பது 1989ம் ஆண்டு மட்டக்களப்பில் தொடங்கிவைக்கப்பட்டது. அவ்வாண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் முஸ்லிம் வாக்காளர்களை நம்ப வைத்து பாராளுமன்ற ஆசனமொன்றைப் பெற்றுவிடுவதற்காகவே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டது. அதன்பிரகாரம் கிடைக்கும் பாராளுமன்ற உறுப்புரிமையானது இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் பிரதேச மக்களுக்கு சுழற்சிமுறையில் பகிர்ந்தளிக்கப்படும் என்று பள்ளிவாயலில் வைத்து உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள் முன்னிலையில் ஹிஸ்புல்லாஹ்வினால் SLMC சார்பாக அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. இதை நம்பிய மக்களும் அமோக ஆதரவை வழங்கினர். SLMC எதிர்பார்த்த படியே பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் கிடைத்தது. குறித்த 2 வருடமுடிவில் SLMC இன் உறுப்பினரான ஹிஸ்புல்லா தமது வாக்குறுதியை நிறைவேற்றாது நம்பிக்கைத் துரோகம் செய்தார்.



எம்.பி பதவி காத்தான்குடிக்கு மாத்திரமே சொந்தமானது என்று கூறி மூன்று முஸ்லிம் பிரதேசங்கள் மத்தியில் இருந்த ஒற்றுமையைத் தவிடு பொடியாக்கினார். பிரதேசவாதத்தினை ஊட்டி வளர்த்தார். இந்த நம்பிக்கைத் துரோகத்தால் உருவான ஊர்ப்பிளவும் ஒற்றுமையீனமும் இன்றுவரை தொடர்கிறது. இவ்வாறு நம்பிக்கைத் துரோகமிழைத்த தமது உறுப்பினருக்கு எவ்விதத் தண்டனையும் SLMC வழங்கவில்லை என்பதுதான் இங்கு ஊன்றிக்கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.



பள்ளிவாயலில் வைத்து வழங்கப்பட்ட பைஅத் வாக்குறுதியை மீறிய ஹிஸ்புல்லாவிற்கு 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் டிக்கட் வழங்கி அவர் மீண்டும் எம்.பியாக உதவியது SLMC.



SLMC இன் முன்னாள் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் கட்சிக்குள் ஏற்பட் விரிசல்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் நோக்குகின்ற சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. அப்படியான ஒரு சூழ்நிலையிலேயே 2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலை வந்தது.



கட்சியைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ஒவ்வொருவரும் எந்தத் திசையில் செல்வார்களோ என்ற நம்பிக்கையீனம் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் SLMC இன் தலைவர் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், அதாவுல்லா போன்ற உயர்சபை உறுப்பினர்கள் எல்லோரும் தமக்குள் ஒரு சத்தியப் பிரமானத்தைச் செய்தார்கள். இதன் அடிப்படையில் தேர்தலின் பின்னர் தாம் அனைவரும் கட்சியை விட்டுப் பிரியாமல் மக்களுக்காக ஒற்றுமையுடன் குரல்கொடுப்போம் என்ற உறுதி மொழியையும் மக்களுக்கு வழங்கினார்கள்.



ஆனால், தேர்தலின் பின்னர் நடந்தது என்ன? ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு கட்சியை உடைத்து முதலில் வெளியேறினார் அதாவுல்லாஹ்.



அதனைத் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி தனிக்கட்சி அமைத்து மற்றுமொரு பிரிவினையைத் தொடங்கி வைத்தார்கள்தான் தற்போதைய ACMC கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனும் அதன் சிரேஷ்ட உறுப்பினரான அமீரலியும். அன்றிலிருந்து தொடங்கி இன்றுவரை இவர்களுக்குள் தொடரும் குத்துவெட்டுக்களும் அரசியல் கழுத்தறுப்புக்களும் ஏராளம் ஏராளம். அப்படியென்றால் இவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பெறுமானம் என்ன?



இவர்களைப் போன்றவர்களால் தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு தேர்தலின் பின்னர் என்ன நடக்கிறது என்பதற்கு 2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது SLMC நடந்துகொண்ட விதம் நல்ல உதாரணமாகும். நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரமுறைமையை ஒழிப்போம் என்றார்கள் மகிந்த ராஜப்பக்ஷ தலைமையிலான ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்கள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தையும் மரியாதையையும் பாதுகாக்கின்ற அரசியல் சூழ்நிலையினை ஏற்படுத்துவோம் என்றார்கள்.



ஆனால் தேர்தலின் பின்னர் என்ன நடந்தது? தனித்தனியாக தமது உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் பாய்ந்து விடுவார்கள் என்பதனால் SLMCயின் தலைவரே அனைவரையும் சேர்த்துக்கொண்டு அரசாங்கத்தின் பக்கம் பாய்ந்தார். (தனித் தனியாக செய்வதுதான் பாவம், கூட்டாகச் செய்தால் அது பாவமில்லை என்பது SLMCயின் சித்தாந்தமோ தெரியாது.)



ஊழல் மோசடி மிக்கது என்பதனால் எந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என SLMC வாக்குறுதி அளித்ததோ அதனைப் பலப்படுத்தி அரசாங்கம் 2/3 பலம் பெறுவதற்கு உதவியது. மாத்திரமன்றி எந்த ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என SLMC வாக்குறுதி அளித்ததோ அதனை மேலும் பலமடங்கு பலப்படுத்துகின்ற 18வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதுவித தயக்கமுமின்றி SLMC வாக்களித்தது. அதன்மூலம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன இலஞ்ச ஊழல் விசாரணைக் குழு போன்ற கட்டமைப்புக்களை இல்லாமல் செய்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக இன்று இருக்கும் நிலை உருவாவதற்கு SLMC துணைபோனது. அதன்மூலம் சிறுபான்மை மக்களுக்கு இருந்த தனித்துவ அங்கீகாரத்தையும் பாதுகாப்பினையும் இல்லாமல் செய்து தற்போது நாம் எதிர்கொள்ளும் இனவாத சூழ்நிலைக்கு SLMC அடித்தளம் இட்டது. ஆக மொத்தத்தில் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களையும் தம்மை நம்பி தேசியப்பட்டியல் MP பதவியை வழங்கிய ஐக்கிய தேசிய கட்சியையும் SLMC ஒரே நேரத்தில் ஏமாற்றியது.



இதன் பின்னர் 2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத சக்திகள் செயற்பட தொடங்கியிருந்த காலமது. தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்ட சம்பவம் போன்ற பல இனவாத நெருக்குதல்களுக்கு முஸ்லிம்கள் அதிக முகம்கொடுக்க ஏற்பட்ட நேரமது.



இனவாத சக்திகளை ஊக்கி வளர்க்கும் அரசாங்கத்திற்கு எதிராக இருந்த கிழக்கு மாகாணமக்களின் மனோநிலையை புரிந்து கொண்ட SLMC அத்தேர்தலிலும் இப்போது போலவே தனித்துப் போட்டியிட்டது. பதுளையில் இப்போது பிரச்சாரம் செய்வது போலவே ஷஷஇனவாத சக்திகளை ஊக்குவிக்கும் இந்த அரசாங்கத்திற்கு பாடம் படிப்பிப்போம். இந்த வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் தமது பள்ளிவாயல்களை அழிப்பதற்கு அளிக்கப்படும் வாக்குகளாகும்' என்று பிரச்சாரம் செய்தது. அது மட்டுமல்லாது இப்போது பதுளையில் செய்யப்பட்டது போலவே உலமாக்கள், ஊர்மக்கள் முன்னிலையில் பைஅத் - சத்தியப்பிரமாணமும் செய்யப்பட்டது. இதனை நம்பிய கிழக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை கணிசமான ஆதரவினை SLMC இற்கு வழங்கியிருந்தனர். அத்தேர்தலில் ஏழு ஆசனங்களை பெற்றுக்கொண்ட SLMC கிழக்குமாகாண சபை ஆட்சியினைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவானது.



இருப்பினும் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளையும் உலமாக்களின் முன்னாள் செய்யப்பட்ட சத்தியப் பிரமாணங்களையும் மீண்டும் ஒரு முறை மீறிய SLMC எவ்வித நிபந்தனைகளுமின்றி மக்கள் வழங்கிய பெறுமதி மிக்க ஆணையினை அரசாங்கத்தின் காலடியில் தாரைவார்த்தது.



தேர்தல் காலங்களில் SLMC வழங்கிவந்த மற்றுமொரு வாக்குறுதிதான் கூடுதல் அதிகார பரவலாக்கத்திற்காக குரல்கொடுப்போம் என்பதாகும். இருப்பினும் இருக்கின்ற அதிகாரப் பகிர்வினையும் மேலும் பலவீனப்படுத்துகின்ற திவிநெகுமச் சட்டமூலமொன்றினை அரசாங்கம் கொண்டு வந்திருந்த வேளை உச்ச நீதிமன்றம் கூட அதற்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்தது. மாகாண சபைகளின் சம்மதத்தினைப் பெறாமல் இதனைச் சட்டமாக்க முடியாது என்று தீர்ப்பும் வழங்கியது. SLMC இன் ஆதரவுடன் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதல் அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணை திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கும் பிரேரணையாகும்.



கிழக்கு மாகாண சபையில் பிரதான சக்தியான SLMC யுடன் எவ்வித கலந்தலோசிப்பும் செய்யாமலேயே அரசாங்கம் இப்பிரேரணையைக் கொண்டுவந்தது. அதிகாரப் பகிர்வினை பலவீனப்படுத்தும் இது போன்ற ஒரு சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என SLMC யின் தலைமைத்துவம் பகிரங்கமாக வாக்குறுதியளித்தது. இருப்பினும் கிழக்குமாகாணசபையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற வேளை எவ்வித தயக்கமுமின்றி SLMC யின் அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு வழங்கினர்.



இது பற்றி பலரும் ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பிய நேரம் "இது தலைமைத்துவத்திற்குத் தெரியாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவாகும். எமது ஆலோசனையைப் பெறாமல் வாக்களித்த மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்போம்" என மற்றுமொரு வாக்குதி SLMC யினால் வழங்கப்பட்டது. அதுவும் பின்னர் மீறப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, திவிநெகும சட்ட மூலமானது இறுதிவாக்கெடுப்பிற்காக பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட நேரம் SLMC யின் தலைவர், செயளாளர், தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் எவ்வித வெட்கமும், தயக்கமுமின்றி இதற்கு ஆதரவாகவாக்களித்தனர். இதன் மூலம் மீண்டுமொரு முறை வாக்கு மீறலைச் செய்தனர். ஆக மொத்தத்தில் திவிநெகும விடயத்தில் மாத்திரம் மூன்று வெவ்வேறு வாக்குறுதிகளை வழங்கிய SLMC எவ்வித தயக்கமுமின்றி அவை மூன்றினையும் மீறியது.



கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் SLMC மக்களை ஊமாற்றியது போலவேதான் அதற்கு முந்திய கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் SLMC கிழக்கு மாகாண மக்களையும் ஏமாற்றியது. உண்மையில் அந்தத் தேர்தல் ஒரு நம்பிக்கைத் துரோகத்தில்தான் தொடங்கியது. அதாவது UNP யோடு இணைந்து தேர்தலில் களமிறங்குவதற்காக SLMC ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளை, அதுவரை SLMCயுடன் இணைந்திருந்த ஹிஸ்புல்லாஹ் கடைசித் தருவாயில் SLMC இற்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு யாருக்கும் தெரியாமல் றிசாத் அணியோடு சேர்ந்து அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டார்.



தாருஸ்ஸலாமில் வைத்து வேட்பு மனுவில் கைச்சாத்திடவேண்டிய அவர் இறுதி நேரத்தில் அலரி மாளிகையில் வைத்து வேட்பு மனுவில் கையெழுத்திட்டார். இந்த நம்பிக்கைத்துரோகத்தின் பின்புலமாக அமைச்சர் றிசாதும் அவரது ACMC கட்சியுமே இருந்தனர். இவ்வாறு SLMC யினை ஏமாற்றியவர்கள் ஹிஸ்புல்லாஹ்வை தாம் கிழக்குமாகாண முதலமைச்சராக ஆக்குவதாக முஸ்லிம்மக்களுக்கு பகிரங்க வாக்குறுதி வழங்கினார். பள்ளிவாயல்களில் உலமாக்கள் முன்னிலையிலும் இவ்வாக்குறுதியை அவர்கள் வழங்கினர்.



கிழக்கு முஸ்லிம்களும் இதனை நம்பி அதிக ஆதரவினை வழங்கியிருந்தனர். தேர்தலின் பின்னர் வழமை போலவே றிசாத்தையும் ஹிஸ்புல்லாவையும் நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டனர். அதன் விளைவு பிள்ளையான் என அறியப்படும் சந்திர காந்தன் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.



இவ்வாறு வாக்கு மீறல்களும் நம்பிக்கைத் துரோகங்களும் நிறைந்த இந்த வரலாற்றுத் தொடரில்தான் தற்போது பதுளை மாவட்ட தேர்தலிலும் பைஅத் - சத்தியப்பிரமாணம் என்ற மற்றுமொரு அத்தியாயம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. கடந்த 25 வருட அரசியல் வாக்குறுதிகளும் பையத்களும் வழங்கப்பட்டு அவை அத்தனைகளும் முற்றுமுழுதாக மீறப்பட்டு இருக்கின்றநிலையில் தான் மீண்டும் ஒரு தேர்தல் சத்தியப்பிமாணத்தினை SLMC - ACMC அணியினர் தற்போது செய்திருக்கின்றனர். கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் எதிர்கால அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள விரும்பும் பகுத்தறிவுள்ள எந்த ஒருவாக்காளனாலும் இந்த பதுளை சத்தியப்பிரமாணத்தை நம்பமுடியாது.



தேர்தலில் நாம் வெற்றி பெற்றாலும் ஒரு போதும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க மாட்டோம் எனக் கூறும் உறுதிமொழி அமுல் செய்யப்பட்டாலும் கூட இது ஏதேனும் ஒரு நன்மையை பதுளை மக்களுக்கு பெற்றுத்தருமா என்பது சிந்திக்கப்பட வேண்டிய மற்றுமொரு விடயமாகும். SLMC மற்றும் ACMC ஐ பொறுத்தவரையில் அவர்கள் மத்திய அரசாங்கத்தில் முக்கிய பங்காளிகளாக இருக்கிறார்கள். இக்கட்சிகளின் தலைவர்களான றஊப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகிய இருவரும் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருக்கிறார்கள். SLMC யைப் பொறுத்தவரையில் அதன் தவிசாளரான பஷீர் சேஹூதாவுதும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அங்கம் வகிக்கின்றார்.



அமைச்சரவை அதிகாரங்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பையும், சுயமரியாதையையும் உறுதி செய்வதற்கு பயன்படாவிட்டாலும் கூட இந்த அமைச்சர்களும் அவர்களின் சகாக்களும் பல்வேறு பொருளாதார இலாபங்களையும் சொகுசுகளையும் அனுபவிப்பதற்கு மாத்திரம் அவை பயன்படுகின்றன. அத்தோடு இவர்கள் அரசாங்கத்தின் ஏனைய மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களினதும் பங்காளிகளாக இருக்கின்றனர்.



இந்நிலையில் அரசாங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அதிகூடிய கடமைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் தாண்டி இவர்களால் எதனையும் செய்ய முடியாது. இந்த நிலையில் இவர்கள் தனியாக பதுளையில் போட்டியிட்டு அதன் மூலமாகக் கிடைக்கும் மாகாணசபை உறுப்பினர் மாத்திரம் தனியாக நின்று எதனைச் சாதிக்கப்போகிறார்? பதுளை முஸ்லிம்களை இனரீதியாகத் தனிமைப்படுத்தியது மட்டுமின்றி அவர்களை அரசாங்கத்திலிருந்து தனிமைப்படுத்வதற்கும் மாத்திரமே இது உதவும்.



எனவே தேர்தல் காலங்களில் வழமையாக மேற்கொள்ளப்படும் தந்திர நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக பதுளையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சத்தியப்பிரமாணத்தினை வரலாறு தெரிந்த பகுத்தறிவுள்ள எந்தவொரு முஸ்லிம் வாக்காளனாலும் நம்ப முடியாது. இதனால் பதுளை முஸ்லிம்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகளும் எதுவும் இல்லை.



"ஒரே பொந்தில் ஒரு முஃமின் இருமுறை தீண்டப்பட மாட்டான்" என்ற நபிமொழி இங்கு நினைவுபடுத்தத் தக்கது.


No comments:

Post a Comment