வான் வழியாக நடத்தப்படும் தாக்குதல்களால் மட்டும் ஐஎஸ் வாதிகளை முழுமையாக அழித்துவிட முடியாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜாரிப் கூறியுள்ளார்.
இராக்கில் ஐஎஸ் வாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. தரை வழியாகவும் தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமாவிடம் அந்நாட்டு ராணுவம் அனுமதி கேட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
வெளியுறவு பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முகமது ஜாவத் பேசியது:
இது சிரியா, இராக் ஆகிய நாடுகளில் உள்ள பிரச்சினை அல்ல. சர்வதேச அளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிரச்சினை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பலர் சிரியாவிலும், இராக்கிலும் சண்டையிலும், தீவிரவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இது சர்வதேச பிரச்சினை. இப்போது ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அணிதிரண்டுள்ள நாடுகளில் பல முன்பு அவர்களை ஆதரித்து உதவியளித்தவர்கள் தான் என்றார்.
No comments:
Post a Comment